மேம்படுத்தப்பட்ட மருத்துவ சேவை... ரூ.10 ஆயிரம் கோடி நிதியுதவி
கிராமப்புற மருத்துவ சேவைகளை மேம்படுத்தும் வகையில், கூட்டுறவு நிறுவனங்கள் மூலம் இயங்கும் மருத்துவமனைகளுக்கு 10 ஆயிரம் கோடி ரூபாய் நிதியுதவி வழங்கும் திட்டத்தை மத்திய அரசு தொடங்கியுள்ளது.
மத்திய அரசின் தன்னாட்சி பெற்ற நிறுவனமான தேசிய கூட்டுறவு வளர்ச்சிக் கழகம், சுகாதார உட்கட்டமைப்பை மேம்படுத்த புதிய திட்டத்தை வகுத்துள்ளது. கூட்டுறவு மூலம் சுகாதாரம் எனும் இத்திட்டத்தை, மத்திய வேளாண் அமைச்சர் நரேந்திர சிங் தோமர் தொடங்கி வைத்தார்.
நாடு முழுவதும் கூட்டுறவு நிறுவனங்களால் கிராமப்புறங்களில் செயல்படுத்தப்படும் 5000 படுக்கை வசதி கொண்ட 52 மருத்துவமனைகளில், மேம்படுத்தப்பட்ட சேவைகளை வழங்க10 ஆயிரம் கோடி ரூபாய் கடனுதவி வழங்கப்பட உள்ளது. கொரோனா பெருந்தொற்று சூழலை கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.
ஆரோக்கியத்தில் முதலீடு, சுகாதார சேவைகளை ஒழுங்கமைத்தல், மருத்துவ பன்மைத்துவத்தை ஊக்குவித்தல், மலிவு விலையில் சுகாதார பராமரிப்பு போன்றவற்றை உள்ளடக்கிய இத்திட்டம், கிராமப்புற மக்களுக்காக முன்னெடுக்கப்பட்டுள்ளது. விதிமுறைகளுக்கு உட்பட்டு செயல்படும் அனைத்து கூட்டுறவு நிறுவனங்களுக்கும், இத்திட்டத்தின் மூலமான நிதியுதவி கிடைக்கப்பெறும்.
மருத்துவமனைகள், சுகாதாரம், மருத்துவக் கல்வி, செவிலியர் கல்வி, துணை மருத்துவக் கல்வி, சுகாதார காப்பீடு போன்றவற்றை ஏற்படுத்தி அனைவரும் பயன்பெற இத்திட்டம் உதவிகரமாக அமையும். கிராமப்புறங்களில் மாற்றத்தை கொண்டுவருவதுடன், ஒருங்கிணைந்த முழுமையான சுகாதார சேவைகளை மக்களுக்கு வழங்க இயலும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
மேம்படுத்தப்பட்ட மருத்துவ சேவை... ரூ.10 ஆயிரம் கோடி நிதியுதவி #CentralGovt | #MedicalService | #CooperativeCompanies https://t.co/yYurFupy6K
— Polimer News (@polimernews) October 20, 2020
Comments