ஆரோன் ஐடிஐயில் படிக்கும் போதே சித்தாள் வேலை..! மாணவர்கள் மண் சுமக்கும் அவலம்
சாத்தான்குளத்தை அடுத்த ஆனந்தபுரத்தில் அமைந்துள்ள ரஞ்சி ஆரோன் ஐடிஐ என்ற கல்வி நிறுவனத்தில் எலெக்ட்ரிகல் பிரிவு மாணவர்களை சித்தாள் போல கட்டிட வேலை செய்யவைப்பதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் மண் சுமக்கும் வீடியோ வெளியான பின்னணி குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு.
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தை அடுத்த ஆனந்தபுரத்தில் ராஞ்சி ஆரோன் ஐடிஐ என்ற தனியார் தொழிற்பயிற்சி நிலையம் செயல்பட்டு வருகிறது .
சுதாகர் என்பவரை முதல்வராக கொண்டு இயங்கி வரும் இந்த ஐடிஐ கொரோனா கால விடுமுறை முடிந்து கடந்த வாரம் முதல் புதிய மாணவர் சேர்க்கையுடன் செயல்பட்டு வருகின்றது.
இந்த ஐடிஐயில் கட்டுமான பணிகள் நடப்பதாகவும், இதற்கு தனியாக கட்டிட வேலை செய்யும் சித்தாள்களுக்கு கொடுக்கப்படும் சம்பளத்தை மிச்சப்படுத்துவதற்காக எலெக்ட்ரிகல் மற்றும் பிட்டர் பிரிவு மாணவர்களை சித்தாள்களை போல மண் சுமக்க வைப்பதாகவும், காலை முதல் மதியம் வரை 8 பேர் மதியம் முதல் மாலை வரை 8 பேர் என மாணவர்களை பிரித்து வேலைவாங்குவதாக வீடியோ ஆதாரத்துடன் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
தாமதமாக வகுப்புகள் தொடங்கியுள்ளதால் வேலை நாட்கள் குறைவாக இருப்பதால் பாடங்களை முடிக்க சிரமமாக இருக்கும் எனவே தனது வகுப்பு மாணவர்களை பணிக்கு அனுப்ப இயலாது என்று மறுத்ததால் , நிர்வாகத்துக்கு ஒத்துழைக்க மறுத்ததாக கூறி தன்னை பணி நீக்கம் செய்ததாக குற்றஞ்சாட்டிய ஆசிரியர் மிகாவேல் செட்லின், இங்குள்ள மாணவர்கள் எவராவது கட்டிட வேலைக்கு செல்ல மறுத்தால் மதிப்பெண்களில் கைவைத்து விடுவோம் என்று மிரட்டி அவர்களை சித்தாள் வேலைக்கு அழைத்து செல்வதாகவும், புகார் தெரிவித்துள்ளார்.
இந்த புகார் குறித்து ராஞ்சி ஆரோன் ஐடிஐ முதல்வர் சுதாகரை தொடர்பு கொண்டு விளக்கம் கேட்ட போது அவர் பதில் அளிக்க மறுத்து விட்டார்.
மாணவர்கள் சித்தாள் வேலை செய்வது அவர்களது உடலை பலப்படுத்தும் உடற்பயிற்சி என்று எடுத்துக் கொண்டால் கூட ஆயிரக்கணக்கில் கல்வி பயிற்சி கட்டணமும், சீறுடைக்கு என்று தனியாகவும் கட்டணம் வசூலித்துக் கொண்டு சரிவான கட்டிடத்தின் மீது அபாயகரமான முறையில் நின்று இந்த வேலையை செய்ய வேண்டியதில்லை என்பதே மாணவர்களின் பெற்றோரது ஆதங்கமாக உள்ளது.
அதே நேரத்தில் படிக்கும் போதே வேலை என்று விளம்பரப்படுத்தி விட்டு மாணவர்களை சம்பளம் இல்லாத ,சித்தாளாக வேலை வாங்குவதை வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சிதுறை அதிகாரிகள் தடுத்து நிறுத்த வேண்டும்..! என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.
Comments