நீட் மதிப்பெண் குளறுபடி தவறு நடந்தது எங்கே..?

0 2184
நீட் மதிப்பெண் குளறுபடி தவறு நடந்தது எங்கே..?

நீட் தேர்வில் நல்ல மதிப்பெண்கள் பெற்ற சில மாணவர்களுக்கு உரிய மதிப்பெண்கள் வழங்கபடாமல், பூஜ்ஜியம் மதிப்பெண் வழங்கப்பட்டு இருப்பதால் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

நீட் நுழைவுத் தேர்வு முடிவுகள் கடந்த 16ஆம் தேதி வெளியிடப்பட்ட போது, பல மாநிலங்களில் தேர்வு எழுதிய மாணவர்களின் எண்ணிக்கையை விட கூடுதலாக மாணவர்கள் தேர்ச்சி பெற்று இருப்பதாக பல்வேறு குளறுபடிகள் உடன் முடிவுகள் வெளியானது.

பின்னர் புகார் தெரிவிக்கப்பட்டதால் சரிசெய்யப்பட்டு திருத்தப்பட்ட முடிவுகள் வெளியிடப்பட்டன.

இந்நிலையில் சென்னை மயிலாப்பூரை சேர்ந்த சாய் அக்ஷய் என்ற மாணவர், கடந்த 6 ஆம் தேதி வெளியிடப்பட்ட ஓஎம்ஆர் ஷீட் நகலைப் பார்த்து, தனக்கு 517 மதிப்பெண்கள் கிடைக்கும் என மதிப்பீடு செய்திருந்த நிலையில், தேர்வு முடிவில் பூஜ்ஜியம் என மதிப்பெண் வந்ததால் அதிர்ச்சி அடைந்துள்ளார்.

விடைத்தாள் நகலில் இருப்பது தனது கையெழுத்து இல்லை என்றும் அவர் புகார் கூறியுள்ளார்.

இதேபோல சென்னை பாடியை சேர்ந்த மற்றொரு மாணவி தான் நீட் தேர்வில் 410 மதிப்பெண்கள் கிடைக்கும் என்று மதிப்பிட்டிருந்த நிலையில், பூஜ்ஜியம் மதிப்பெண்களுடன் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.

பல மாதங்களாக இரவு பகல் பாராமல் கடும் உழைப்பை கொடுத்து தேர்வு எழுதிய தங்கள் பிள்ளைகளுக்கு சரியான மதிப்பெண்கள் கிடைக்காமல் ஏமாற்றப்பட்டு இருப்பதாக பெற்றோர் வேதனை தெரிவித்தனர்.

இதேபோல அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த மஞ்சு என்ற மாணவி உட்பட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் உண்மையான மதிப்பெண்களுக்கு மாறாக குறைவான மதிப்பெண்கள் கொடுக்கப்பட்டு இருப்பதால் மாணவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

நீட் தேர்வை நடத்தும் தேசிய தேர்வு முகமை  நிர்வாகம் உடனடியாக தவறு எங்கே நடந்துள்ளது என்பதை கண்டறிந்து, மாணவர்களுக்கு சரியான மதிப்பெண்களை வழங்க வேண்டும் என்பதே பெற்றோரின் எதிர்பார்ப்பாக உள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments