அதிகரிக்கும் சீனாவின் அத்துமீறல்கள்... இந்தியாவின் துருப்புச் சீட்டாகும் திபெத், தலாய்லாமா!

0 8783
நியிமா டென்சின் | தலாய் லாமா


--
இந்தியா - சீனா இடையேயான கட்டுப்பாட்டு எல்லைக் கோட்டில் தற்போது பதற்றம் தணிந்தாலும், எதிர்காலத்தில் எல்லை தொடர்பான பிரச்னைகளில் திபெத் விவகாரமும், தலாய் லாமாவும் இந்தியாவின் முக்கிய துருப்புச் சீட்டாகப் பயன்படுத்தப்படலாம் என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

1950 ம் ஆண்டில் சீனா திபெத்தை ஆக்கிரமித்தபோது, திபெத்தியர்கள் இந்தியாவில் தஞ்சமடைந்தனர். தற்போது சுமார் 1,00,000 திபெத்தியர்கள் இந்தியாவில் சுதந்திரமாக வாழ்ந்து வருகின்றனர். இந்தியாவில் தஞ்சமடைந்த திபெத்தியர்களின் வாரிசுகளைக் கொண்டு சிறப்பு எல்லைப் புறப் படையை (SFF) இந்தியா உருவாக்கியது. இந்த படை 1971 மற்றும்1999  போர்களில் இந்தியாவின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றியது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், திபெத்தியர்களைக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள SFF படைப் பிரிவைச் சேர்ந்த நியிமா டென்சின், ஆகஸ்ட் 29 - ம் தேதி சீனாவுடன் நடைபெற்ற கைகலப்பில் கொல்லப்பட்டார். அவரது ஊடலைப் பொதுமக்களின் பார்வைக்கு வைத்த இந்தியா, அவரது உடலில் இந்திய, திபெத் கொடிகளைப் போர்த்தி முழு ராணுவ மரியாதையுடன் அடக்கம் செய்தது. மேலும், இந்த இறுதிச்சடங்கு நாடு முழுவதும் ஒளிபரப்பு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

SFF படைப் பிரிவில் உள்ள நியிமா டென்சினின் உடலில் திபெத் கொடியைப் போர்த்தியது, திபெத்தின் மீதான சீனாவின் இறையாண்மையைக் கேள்விக்குள்ளாக்கும் நிலைப்பாடு என்று ஆய்வாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இதன் மூலம் திபெத்தியர்களின் பங்கு  SFF படையில் இருப்பதை இந்தியா உறுதிப்படுத்தியது. சில ஆய்வாளர்கள், இந்தியாவின் திபெத் என்று குறிப்பிடப்படும் ஸ்லீவ் பகுதி இந்தியாவின் முக்கிய துருப்புச் சீட்டாக இருக்கப்போகிறது என்றும் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து, ரா அமைப்பின் ஓய்வுபெற்ற அதிகாரி ஜெயதேவா ரனாடே, “நியிமா டென்சினுக்கு அளிக்கப்பட்ட அங்கீகாரம்,  உங்கள் நாட்டு மக்கள் எங்களுடன் போராடுகிறார்கள் என்று சீனாவுக்குச் சொல்லப்பட்டுள்ள தெளிவான செய்தி” என்று கூறியுள்ளார்.

புது டெல்லியில் இயங்கும் சீன பகுப்பாய்வு, வியூகம் மற்றும் ஆராய்ச்சிக் குழுமத்தின் தலைவரான ரனாடே, “ SFF படையின் சக்தியை இதற்கு முன்பு இந்தியா இந்த அளவுக்கு ஒப்புக்கொண்டதாக எனக்கு நினைவில் இல்லை” என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும், அமைதி வழியில் சீனாவின் ஆக்கிரமிப்புக்கு எதிராகப் போராடி வருவதற்காக நோபல் பரிசு பெற்றவரும், திபெத்திய ஆன்மீக குருவுமான தலாய் லாமா இந்தியாவில் 60 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வருகிறார். திபெத் விவகாரத்தில் இந்தியத் தலைவர்கள் தண்ணீர் மேல் உள்ள தாமரையைப் போல பட்டும் படாமலும் தான் குரல் கொடுத்து வருகின்றனர். ஆனால், அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் திபெத்திற்கு வலுவான ஆதரவுக்குரல் கொடுத்து வருகின்றனர்.  எதிர்காலத்தில் திபெத்திய சுயாட்சி மற்றும் ஜனநாயகம் குறித்து இந்தியா குரல் கொடுக்கத் தொடங்கலாம் என்று ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்,

அடுத்த தலாய் லாமா தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர், அமைதி வழிப் போராட்டம் என்பது ஆயுத வழிப் போராட்டமாக மாறலாம் என்று கருதப்படுகிறது. எனவே திபெத் விவகாரம் இந்தியாவின் துருப்புச் சீட்டாகவே இருக்கும் என ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments