லடாக் எல்லையில் நீடிக்கும் பதற்றம்: எடுபடாத சீனாவின் நரித்தந்திரமும் இந்தியாவின் புதிய துருப்புச்சீட்டும்!

0 27991
லடாக் எல்லையில் நீடிக்கும் பதற்றம்: எடுபடாத சீனாவின் நரித்தந்திரமும் இந்தியாவின் புதிய துருப்புச்சீட்டும்!

இந்தியா-சீனா இடையே ஏற்படும் எல்லைப் பதற்றங்களில், திபெத் விவகாரமும், தலாய் லாமாவும் இந்தியாவின் துருப்புச் சீட்டாக பயன்படலாம் என ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். 

கிழக்கு லடாக் எல்லையில், கால்வன் பள்ளத்தாக்கு, பாங்காங்சோ ஏரி, தெப்சாங் சமவெளி மற்றும் மலைப்பகுதிகளை மையமாகக் கொண்டே, தற்போது மோதல் போக்கும், பதற்றத்தை தணிக்க பேச்சுவார்த்தைகளும் நடைபெற்று வருகின்றன.

இரு நாட்டு ராணுவ உயரதிகாரிகளிடையே விரைவில் 8ஆவது சுற்று பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது.

அதேசமயம், 1,597 கிலோமீட்டர் நீள கட்டுப்பாட்டு எல்லைக் கோட்டில், குளிர்காலத்திற்கு ஏற்ற படைக்குவிப்புக்கும் இரு நாட்டு ராணுவங்களும் தயாராகி வருகின்றன.

மோதல் போக்கை தணிக்க, அனைத்து வகை படைப் பிரிவுகளையும் ஒரேநேரத்தில் விலக்கிக் கொள்ள வேண்டும் என இந்தியா வலியுறுத்தி வருகிறது.

ஆனால் முதல் கட்டமாக, டாங்குகள் மற்றும் பீரங்கிப் படைப்பிரிவுகளை விலக்கிக் கொள்வது, அதன் பிறகு காலாட்படைப் பிரிவை விலக்கிக் கொள்ளலாம் என சீனா அழுத்தம் தருகிறது.

சுமார் 18 ஆயிரம் அடி உயரத்தில் மலைசார்ந்த பகுதி இந்தியாவிற்கு சாதகமாக உள்ள நிலையில், அங்கிருந்து டாங்குகள் மற்றும் பீரங்கிப் படைப்பிரிவுகளை நகர்த்தி விடும் பட்சத்தில், பனிப்பொழிவு தொடங்கி சாலைகளை பனிமூடிவிட்டால் பின்னர் மீண்டும் அங்கு உடனடியாக செல்ல முடியாத நிலை ஏற்படும்.

ஆனால், சீனா ஏற்கெனவே திட்டமிட்டு ஆறுவழிச் சாலையை ஏற்படுத்தியுள்ளதால் ஒரே நாளில் கூட அங்கு படைப் பிரிவுகளை கொண்டுவந்து விடமுடியும்.

இதை மனதில் கொண்டே, சீனா கூறுவதை ஏற்கக் கூடாது என்பதில் இந்தியா திட்டவட்டமாக உள்ளது.

கட்டுப்பாட்டு எல்லைக் கோட்டில் தற்போது நிலவும் பதற்றம் தணிந்தாலும், எதிர்காலத்தில் எல்லை விவகாரங்களில், திபெத் விவகாரமும், தலாய் லாமாவும் இந்தியாவின் துருப்புச் சீட்டாக இருக்கும் என ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

திபெத்தியர்களை வைத்து உருவாக்கப்பட்டுள்ள, எஸ்எஃப்எஃப் (SFF) எனப்படும் இந்திய ராணுவத்தின் ரகசிய படைப் பிரிவை சேர்ந்த வீரர் Nyima Tenzin இறுதிச் சடங்கின்போது, முழு ராணுவ மரியாதை அளிக்கப்பட்டதையும், இந்திய மற்றும் திபெத் கொடிகள் உடலில் போர்த்தப்பட்டதையும் ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

Special Frontier Force எனப்படும், சிறப்பு எல்லைப் படையில் இடம்பெற்றுள்ள திபெத்தியர்கள் மலைகள் மீது திறம்படப் போர் செய்யும் தலைசிறந்த வீரர்கள்.

பாகிஸ்தானில் இருந்து தனிநாடு கோரி வங்கதேச விடுதலை இயக்கம் போராடியபோது, 1971ஆம் ஆண்டில் பாகிஸ்தானை தோற்கடிப்பதில் சிறப்பு எல்லைப் படை முக்கிய பங்காற்றியது.

1999ஆம் ஆண்டில், மேற்கு லடாக்கில் கார்கிலில் இருந்து பாகிஸ்தானியப் படைகளை விரட்டி அடித்ததிலும், சிறப்பு எல்லைப் படைக்கும் பங்கு உண்டு.

1950ஆம் ஆண்டில் சீனா, திபெத்தை ஆக்கிரமித்தபோது, இந்தியாவில் தஞ்சமடைந்தவர்களின் வாரிசுகள், எஸ்எஃப்எஃப் படைப் பிரிவில் உள்ள நிலையில், அதன் வீரர் உடலுக்கு முழு ராணுவ மரியாதை அளிக்கப்பட்ட நிகழ்வு, திபெத்தின் மீதான சீனாவின் இறையாண்மையை கேள்விக்குள்ளாக்கும் நிலைப்பாடு என்றும் கருதப்படுகிறது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments