'நீட் தேர்வில் வெற்றி பெற என்னை யாருக்கும் தத்து கொடுக்கவில்லை!'- சபரிமாலாவுக்கு ஜீவித்குமார் பதில்

0 92514

நீட் தேர்வில் வெற்றி பெறுவதற்காக என் பெற்றோர் என்னை யாருக்கும் தத்து கொடுக்கவில்லை என்று ஜீவித் குமார் ஆசிரியை சபரிமாலாவுக்கு பதிலளித்துள்ளார். 

தேனி மாவட்டம், பெரியகுளம் சில்வார்பட்டி அரசு மாதிரி பள்ளியில் இரண்டு வருடத்துக்கு முன்பு பன்னிரெண்டாம் வகுப்பு பயின்ற ஜீவித்குமார், கடந்த வருடம் நீட் தேர்வு எழுதியதில் 193 மதிப்பெண் பெற்றிருந்தார். இதனால் மருத்துவக் கல்லூரியில் சேர முடியாத நிலையில், தனியார் நீட் பயிற்சி பள்ளியில் பயின்று நீட் தேர்வில் 664 மதிப்பெண் பெற்று அகில இந்திய அளவில் 1823- வது ரேங்க் பட்டியலில் வந்துள்ளார். மேலும், அரசு பள்ளியில் பயின்ற மாணவர்களில் அகில இந்திய அளவில் முதல் மாணவனாக சாதனை புரிந்தார். இந்த நிலையில், தேனி மாவட்ட ஆட்சியரை சந்தித்து ஜீவித்குமார் வாழ்த்து பெற்றார். 

இந்த நிலையில், சபரிமாலா என்பவர் தன் முகநூல் பக்கத்தில், ஜீவித்குமாரை தத்தெடுத்து செலவு செய்து படிக்க வைத்ததாகக் கூறியிருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. இந்த விவகாரம் குறித்து ஜீவித்குமார் கூறியதாவது...

”என் அப்பா ஆடு மேய்ப்பவர். அம்மா 100 நாள் வேலைத்திட்டத்தில் கூலி வேலைக்கு செல்பவர். ஆனாலும், என் பெற்றோர் நீட் தேர்வில் நான் வெற்றி பெறுவதற்கு மிகுந்த ஊக்கம் கொடுத்தனர். என் வெற்றிக்கு சில்வார்பட்டி அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்கள் பெரிதும் உதவினர்.

சபரிமாலா என்பவர் தன் முகநூல் பக்கத்தில் என்னை அரசியல் கட்சியினர் மிரட்டியதாகவும் நீட் தேர்வில் வெற்றி பெறுவதற்கு என்னை என் பெற்றோர் தத்து கொடுத்ததாகவும்  வீடியோ பதிவிட்டுள்ளார். இதைப் பார்த்து நான் அதிர்ச்சியடைந்தேன். என் தாய் தந்தை என்னை யாருக்கும் தத்து கொடுக்கவில்லை. எந்த அரசியல்வாதிகளும் மிரட்டவில்லை. படிப்பு சம்பந்தமாக எனக்குப் பலரும் எனக்கு உதவி செய்துள்ளார். அதனால், நான் நீட் தேர்வில் வெற்றி பெற்றுள்ளேன். சபரிமாலா என்பவர் அவரது முகநூலில் பதிவிட்ட பதிவுகள் அனைத்தும் தவறானவை'' என்று தெரிவித்துள்ளார்..

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments