உபகரணங்கள் வாங்கியதில் முறைகேடு முன்னாள் டீன் மீது வழக்குப்பதிவு

0 1774
உபகரணங்கள் வாங்கியதில் முறைகேடு முன்னாள் டீன் மீது வழக்குப்பதிவு

சேலம் அரசு தலைமை மருத்துவமனையில் 2013 மற்றும் 2014 ஆம் ஆண்டில் மருத்துவமனைக்கான உபகரணங்கள் வாங்கியதில் மோசடி நடந்தது தொடர்பாக முன்னாள் டீன் உள்பட 5 பேர் மீது சேலம் லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.

சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனையில் 2013 மற்றும் 2014 ஆம் ஆண்டில் கார்த்திகேயன் என்பவர் டீனாக பணியாற்றி வந்தார். அந்த காலகட்டத்தில் மருத்துவமனைக்கு தேவையான உபகரணங்கள் மற்றும் மருந்து மாத்திரைகளை தனியார் மருந்து நிறுவனங்களிடம் இருந்து வாங்கியதில் அதிகாரிகள் சிலருடன் சேர்ந்து டீன் கார்த்திகேயன் மோசடியில் ஈடுபட்டதாக புகார் கூறப்பட்டது. இரண்டு மடங்கு முதல் மூன்று மடங்கு வரை விலை அதிகமாக தெரிவித்து போலி ஆவணங்கள் தயாரித்து மோசடி நடந்ததாக கூறப்பட்டது. கார்த்திகேயன் ஓய்வு பெற்றுவிட்ட நிலையில் நடைபெற்ற மோசடி குறித்து விசாரிக்க சேலம் லஞ்ச ஒழிப்புப் பிரிவு போலீசாருக்கு தமிழக அரசு உத்தரவிட்டது.

முதற்கட்ட விசாரணையில் 12 லட்சத்து 48 ஆயிரம் ரூபாய் வரை மோசடி செய்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து முன்னாள் டீன் கார்த்திகேயன், அப்போது நிர்வாக அலுவலராக இருந்த இளங்கோவன், முன்னாள் குடோன் கண்காணிப்பாளராக இருந்த தண்டபாணி, உதவி கண்காணிப்பாளராக இருந்த அசோக்ராஜ், தனியார் மருந்து நிறுவன உரிமையாளர் மீனாட்சி ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது. மோசடி மற்றும் பொய் ஆவணங்கள் தயாரித்தல், அரசை ஏமாற்றுதல், குற்றச்சதியில் ஈடுபடுதல் உட்பட பத்து பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த 5 பேரில் அசோக்ராஜ் இறந்துவிட்ட நிலையில், இளங்கோ ஓய்வு பெற்றுவிட்டார். தண்டபாணி சேலம் மருத்துவ கல்லூரியில் அலுவலக கண்காணிப்பாளராக பணியாற்றி வருகிறார்.

திருச்சியில் வசித்து வரும் முன்னாள் டீன் கார்த்திகேயன் ஓய்வு பெற்றுவிட்டாலும் பண பலன் எதுவும் அவருக்கு இன்னும் வழங்கப்படவில்லை என்று கூறப்படும் நிலையில், வழக்கு விசாரணை நிறைவுபெற்ற பின்னரே அவை கிடைக்கும் என போலீசார் கூறுகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments