போர் கப்பலில் இருந்து செலுத்தி...பிரம்மோஸ் ஏவுகணை சோதனை

0 2769

ஐஎன்எஸ் சென்னை  போர் கப்பலில் இருந்து பிரம்மோஸ் சூப்பர்சானிக் ஏவுகணை இன்று வெற்றிகரமாக ஏவி சோதனை நடத்தப்பட்டுள்ளது. இதையும் சேர்த்து 2 மாதங்களில் 11 ஏவுகணைகளை இந்தியா பரிசோதித்துள்ளது.

இந்தியா, ரஷ்யா கூட்டுத் தயாரிப்பில் உருவாக்கப்பட்ட பிரம்மோஸ் சூப்பர்சானிக் ஏவுகணை, ஒலியை விட 3 மடங்கு வேகத்தில் சென்று 290 கிலோ மீட்டர் தூர இலக்கை தாக்கி அழிக்கும் திறன் கொண்டதாகும். அதன் தாக்குதல் இலக்கை 450 கிலோ மீட்டர் தூரமாக அதிகரிப்பது குறித்து டிஆர்டிஓ கடந்த மாதம் சோதனை நடத்தியது.

இதேபோல் சுகோய் போர் விமானத்திலிருந்தும் கடந்த ஆண்டு பரிசோதித்தது. இந்நிலையில் அரேபிக் கடலில் நிறுத்தப்பட்டிருந்த இந்தியாவிலேயே கட்டமைக்கப்பட்ட ஐஎன்எஸ் சென்னை போர் கப்பலில் இருந்து பிரம்மோஸ் ஏவுகணையை டிஆர்டிஓ இன்று சோதித்துள்ளது. அந்த ஏவுகணை தாக்குதல் இலக்கை மிகவும் துல்லியமாக தாக்கி அழித்ததாக டிஆர்டிஓ தெரிவித்துள்ளது. 

இந்த ஏவுகணையுடன் சேர்த்து மிகவும் குறுகிய காலத்தில் அதாவது கடந்த 2 மாதங்களில் 11 ஏவுகணைகளை இந்தியா பரிசோதனை நடத்தியுள்ளது. குறிப்பாக, லடாக் எல்லையில் சீனாவுடன் போர் பதற்றம் நிலவும் நிலையில் 11 ஏவுகணைகளை இந்தியா பரிசோதித்துள்ளது.

கடந்த செப்டம்பர் மாதம் 23ம் தேதியன்று பீரங்கி வாகனங்களை லேசர் வழிகாட்டுதல் உதவியுடன் தாக்கி அழிக்கும் புதிய ஏவுகணையையும், அதே தினத்தில் அணுகுண்டுகளை சுமந்து சென்று தாக்குதல் நடத்தும் பிருத்வி 2 ஏவுகணையையும் பரிசோதித்தது. இதேபோல் செப்டம்பர் 30ம் தேதி தாக்குதல் இலக்கு தூரம் நீட்டிக்கப்பட்ட பிரம்மோஸ் ஏவுகணையையும், அக்டோபர் 1ம் தேதி அர்ஜூன் டாங்கி மூலம் லேசர் சாதன வழிகாட்டுதலுடன் பீரங்கிகளை தாக்கி அழிக்கும் ஏவுகணையையும், அக்டோபர் 3ம் தேதி உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்ட அணுகுண்டுகளை சுமந்து சென்று தாக்குதல் நடத்தும் சவுரியா ஏவுகணையையும், அக்டோபர் 5ம் தேதி நீர்மூழ்கி கப்பல்களை தாக்கி அழிக்கும் ஸ்மார்ட் டொர்டுபிடோ அமைப்பையும் அக்டோபர் 10ம் தேதி எதிரிகளின் ரேடார்களை அழிக்கும் ருத்ரம் 1 ஏவுகணையையும் பரிசோதித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments