சில மாநிலங்களில் கொரோனா சமூக பரவல்... ஹர்ஷவர்த்தன் ஒப்புதல்

0 2504

இந்தியாவின் சில மாநிலங்களில் கொரோனா பரவல் சமூக பரவல் நிலையை அடைந்திருப்பதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்த்தன் ஒப்புக் கொண்டுள்ளார்.

இந்தியாவில் கொரோனா பரவல் அதிகமாக இருந்தபோதிலும், சமூக பரவல் என்ற நிலையை அடையவில்லை என மத்திய அரசு மறுத்து வந்தது. மேற்குவங்க முதலமைச்சரும், திரிணமூல் காங்கிரஸ் கட்சித் தலைவருமான மம்தா பானர்ஜி, தங்களது மாநிலத்தில் கொரோனா பரவல் சமூக பரவல் நிலையை அடைந்துள்ளதாக கடந்த திங்கட்கிழமை கூறியிருந்தார்.

இந்நிலையில், சமூக இணையதளம் மூலம் வாரந்தோறும் நடைபெறும் கலந்துரையாடலில் பேசிய ஹர்ஷவர்த்தன், மேற்குவங்கம் உள்ளிட்ட சில மாநிலங்களில் கொரோனா பரவல் சமூகபரவல் நிலையை அடைந்துள்ளதாகவும், குறிப்பாக மக்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் சமூக பரவல் நிலையை அடைந்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.

எனினும் நாடு முழுவதும் சமூக பரவல் நிலையை அடையவில்லை எனவும், சில மாநிலங்களில் இருக்கும் குறிப்பிட்ட மாவட்டங்களில்தான் சமூக பரவல் நிலையை அடைந்துள்ளது எனவும் அவர் தெரிவித்தார்.

இந்தியாவில் கொரோனா வைரசில் மரபியல் ரீதியில் மாற்றம் ஏற்பட்டதாக கண்டுபிடிக்கப்படவில்லை என்று கூறிய அவர், செய்தித்தாள்கள் மூலம் கொரோனா பரவாது என்றும், அறிவியல் ரீதியில் செய்தித்தாள்கள் மூலம் கொரோனா பரவும் என்பது நிரூபிக்கப்படவில்லை என்றும் குறிப்பிட்டார்.

கேரளாவில் ஓணம் பண்டிகை கொண்டாட்ட நிகழ்ச்சிகளில் கொரோனா பரவல் தடுப்பு வழிகாட்டுதல்கள் பின்பற்றப்படவில்லை என்றும், இதுவே அந்த மாநிலத்தில் கொரோனா பரவல் அதிகரித்திருப்பதற்கு முக்கிய காரணம் என்றும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்த்தன் குற்றம்சாட்டியுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments