சென்னையின் சங்கடமான சாலை எது தெரியுமா ? போக்குவரத்தை சரி செய்யா போலீஸ்
சென்னை துறைமுகத்துக்கு சரக்கு ஏற்றி செல்லும் கண்டெய்னர் லாரிகள் சாலையிலேயே நிறுத்தி வைக்கப்படுவதாலும், போக்குவரத்து போலீசாரின் மெத்தனமான நடவடிக்கையாலும் எண்ணூர், மணலி மாதவரம் சாலையில் 4 நாட்களாக கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
சென்னையில் போக்குவரத்து காவல்துறையினரின் செயல்பாடு எப்படி இருக்கின்றது ? என்பதற்கு மிகச்சிறந்த எடுத்துக்காட்டாக விளங்குவது சென்னை எண்ணூர் முதல் மணலி வழியாக துறைமுகம் செல்லும் சுங்கசாலை..!
நாள் ஒன்றுக்கு 10 ஆயிரம் கண்டெய்னர் லாரிகள் கடப்பதாக சொல்லப்படும் இந்த சாலையில் ஒரே இடத்தில் மையமாக நின்று கொள்ளும் போக்குவரத்து போலீசார் போக்குவரத்து நெரிசல் பற்றி கவலை கொள்ளாமல், சிப்பிங் நிறுவன புரோக்கர்களின் சிபாரிசுக்கு ஏற்ப கண்டெய்னர் லாரிகளை விதியை மீறிச்செல்ல அனுமதிப்பதால் வழக்கமாக வரிசையில் நின்று துறைமுகம் செல்ல காத்திருக்கும் கண்டெய்னர்கள் நாள் கணக்கில் தவம் கிடக்கின்றன.
வெறும் 20 கிலோ மீட்டர் தூரத்தை கடக்க வரிசையில் காத்திருக்கும் லாரிக்கு ஒன்றை நாள் ஆகிறது என்றால் போக்குவரத்து எப்படி சீர் செய்யப்படுகின்றது ? என்பதை பார்த்துக் கொள்ளுங்கள். புரோக்கர்கள் சிபாரிசால் விதியை மீறி அனுப்பி வைக்கப்படும் லாரிகள் சாலையை ஆக்கிரமித்து நிறுத்தி வைத்துக் கொண்டு வரிசையின் இடையில் புகுந்து சென்று விடும். இதனால் சில லாரி ஓட்டுனர்கள் வரிசையில் இடம் பறிபோய்விடும் என்று கிடைத்ததை சாப்பிட்டு விட்டு மணி கணக்கில் லாரியிலேயே தவம் கிடப்பதாக வேதனை தெரிவித்தனர்.
இந்த விதிமீறும் கண்டெய்னர் லாரிகளுக்கு அபராதம் விதிக்க வேண்டிய உதவி காவல் ஆய்வாளர்களோ, மாதவரம் காவல் ஆய்வாளர்களோ போக்குவரத்தை சரிசெய்ய தொடர் ரோந்து பணியில் பெரும்பாலும் ஈடுபடுவதில்லை என்றும் கடை நிலை காவலர்களை சிக்னலில் நிறுத்தி விட்டு அலுவலகங்களிலோ அல்லது ஏதாவது ஒரு இடத்திலேயே காரை நிறுத்தி அமர்ந்து கொள்வதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகின்றது.
துறைமுகத்தில் கப்பல் வந்திருப்பதாக காரணம் காட்டி கடந்த 4 நாட்களாக இரவு பகல் என்றில்லாமல் 24 மணி நேரமும் இந்த பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகின்றது. ஆம்புல்ன்ஸ் தொடங்கி எந்த ஒரு அவசர ஊர்த்தி வாகனமும் இந்த சாலையை எளிதாக கடந்து செல்ல முடியாத நிலை. இதனை சரி செய்யவும், இதற்கு நிரந்தர தீர்வு காண்பதற்கும் போக்குவரத்து காவல்துறை உயர் காவல் அதிகாரிகள் நேரடியாக ஆய்வு செய்து உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பது வாகன ஓட்டிகளின் வேண்டுகோளாக உள்ளது.
குறிப்பாக இரு புறமும் உள்ள சர்வீஸ் சாலையையும், சாலையையும் ஆக்கிரமித்து நிறுத்தி வைக்கப்பட்டுள்ள கனரக வாகனங்களையும் அப்புறப்படுத்தி குண்டும் குழியுமாக உள்ள சாலையை சரிசெய்தாலே போக்குவரத்து நெரிசலை எளிதாக சரி செய்ய இயலும், மேலும் தனியார் யார்டுகளில் இருந்து நேரடியாக சாலைக்கு அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ள வழியை அடைத்தால் போக்குவரத்து நெரிசல் பாதியாக குறையும் என்கின்றனர் வாகன ஓட்டிகள்.
சாலையை ஆக்கிரமித்துள்ள லாரிகளுக்கு சென்னை பெருநகர காவல்துறையினர் அபராதம் விதிப்பதோடு இருசக்கர வாகன ஓட்டிகளிடம் கெடுபிடி காட்டுவது போல விதிகளை மீறும் கண்டெய்னர் லாரிகளையும் பறிமுதல் செய்தால் உடனடியாக போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு கிடைக்கும் என்பதே வாகன ஒட்டிகளின் எதிர்பார்ப்பு..!
Comments