நீட் தேர்வு முடிவுகளில் குளறுபடி..? மாணவர்கள் குற்றச்சாட்டு..!
நாடு முழுவதும் நேற்று வெளியிடப்பட்ட நீட் தேர்வு முடிவுகளில் பல்வேறு குளறுபடிகள் உள்ளதால் மாணவர்களும், பெற்றோர்களும் குழப்பமடைந்துள்ளனர்.
எம்பிபிஎஸ், பிடிஎஸ் உள்ளிட்ட மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு முடிவுகள் நேற்று மாலை வெளியிடப்பட்டது. அதில் பல்வேறு மாநிலங்களில் தேர்வு எழுதிய மாணவர்களின் எண்ணிக்கையையும் தேர்வு முடிவில் இருக்கும் மாணவர்களின் எண்ணிக்கையையும் ஒப்பிடும்போது குளறுபடிகள் ஏற்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
திரிபுராவில் தேர்வு எழுதியவர்களின் எண்ணிக்கை 3536 என குறிப்பிடப்பட்டு இருக்கும் நிலையில், தேர்ச்சி பெற்றவர்களின் எண்ணிக்கை 88 ஆயிரத்து 889 ஆக குறிப்பிடப்பட்டுள்ளது. உத்தரகாண்டில் 12,047 பேர் தேர்வு எழுதிய நிலையில், 37,301பேர் தேர்ச்சி பெற்றதாக கூறப்பட்டுள்ளது.
அதேநேரத்தில் தெலுங்கானாவில் 50,392 பேர் தேர்வு எழுதிய நிலையில், ஆயிரத்து 738 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளதாகவும், ஆனால் தேர்ச்சி விகிதம் 49 புள்ளி15 சதவீதம் எனவும் கூறப்பட்டுள்ளது. அதேபோல உத்தரப் பிரதேசத்தில் ஒரு லட்சத்து 56 ஆயிரத்து 992 பேர் தேர்வு எழுதிய நிலையில், 7 ஆயிரத்து 323 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளதாகவும், ஆனால் தேர்ச்சி விகிதம் 60 புள்ளி 79 சதவீதம் எனவும் புள்ளி விபரங்கள் வெளியிடப் பட்டுள்ளது.
நீட் தேர்வு முடிந்தவுடன், 14 லட்சத்து 3 7 ஆயிரம் பேர் தேர்வு எழுதியதாக மத்திய அரசு அறிவித்திருந்த நிலையில் நேற்றைய தினம் 13 லட்சத்து 66 ஆயிரம் பேர் மட்டுமே தேர்வு எழுதியதாக கூறப்பட்டுள்ளது. இதேபோல் பல்வேறு குளறுபடிகள் இருப்பதால் மதிப்பெண்களிலும் குளறுபடிகள் ஏற்பட்டு இருக்குமோ என மாணவர்களும், பெற்றோர்களும் அச்சமடைந்துள்ளனர்.
இந்நிலையில், நீட் தேர்வு முடிவுகளில் குளறுபடிகளில் இருந்ததன் எதிரொலியாக nta.ac.in இணையதளத்தில் இருந்து தேர்வு முடிவு விவரங்களை தேசிய தேர்வு முகமை இன்று நீக்கிவிட்டது. விரைவில் சரியான தேர்வு முடிவு விவரங்கள் வெளியிடப்படும் என்றும் தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது.
Comments