ஹவ் டூ பிரிண்ட் இந்தியன் கரண்சி..? யூடியூப் பார்த்து சூடுபட்ட பூனைகள்..!

0 9144
யூடியூப் பார்த்து கள்ள ரூபாய் நோட்டுக்களை அச்சடித்து புழக்கத்தில் விட்ட இரு ஜவுளி வியாபரிகள் ஈரோடு போலீசாரால் கைது செய்யப்பட்டனர். அசல் காந்தி நோட்டுக்களை நகல் எடுத்தவர்கள் போலீசாரிடம் சிக்கி திகில் அடைந்த பின்னணி குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு..

யூடியூப் பார்த்து கள்ள ரூபாய் நோட்டுக்களை அச்சடித்து புழக்கத்தில் விட்ட இரு ஜவுளி வியாபரிகள் ஈரோடு போலீசாரால் கைது செய்யப்பட்டனர். அசல் காந்தி நோட்டுக்களை நகல் எடுத்தவர்கள் போலீசாரிடம் சிக்கி திகில் அடைந்த பின்னணி குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு..

போலியான ரூபாய் நோட்டு தயாரிப்பது எப்படி என்று ஒருவர் யூடியூப்பில் பதிவிட்ட வீடியோவைப் பார்த்து அதனை செய்து புழக்கத்தில் விட முயன்ற ஈரோட்டை சேர்ந்த இரு ஜவுளி வியாபரிகள் கம்பி எண்ணும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

ஈரோடு நாராயணவலசு பகுதியில் சாலையோரத்தில் தள்ளுவண்டிக் கடை நடத்திவரும் பால்ராஜ் என்பவரின் கடைக்கு வந்த இருவர், ஏராளமாக உணவுப் பொருட்களை வாங்கிக் கொண்டு நான்கு 500 ரூபாய் நோட்டுக்களை மாற்ற முயன்றுள்ளனர்.

பணத்தைப் பெற்றுக் கொண்ட பால்ராஜுக்கு 500 ரூபாய் நோட்டுக்களை தொட்டுப்பார்த்ததும், அவற்றின் மீது சந்தேகம் வந்துள்ளது. தெளிவாகப் பார்த்த போது அவை கலர் ஜெராக்ஸ் எந்திரத்தின் மூலம் நகல் எடுக்கப்பட்ட 500 ரூபாய் நோட்டுக்கள் என்பதை தெரிந்து கொண்டார்.

அதனை வெளிக்காட்டிக் கொள்ளாமல், தனியாக சென்ற பால்ராஜ், மாமூலாக தனது கடைக்கு வந்து செல்லும் ஈரோடு வடக்குக் காவல்துறையினருக்குத் தகவல் தெரிவித்துள்ளார். போலீசார் வர தாமதமானதால் நீண்ட நேரமாகியும் கொடுத்த பணத்திற்கு சில்லறை தராமல் இழுத்தடிப்பதை பார்த்து, உஷாரான இரண்டு நபர்களும் அங்கிருந்து தப்பிக்க முயற்சித்துள்ளனர்.

அந்த நேரத்தில் அங்கு வந்த காவல்துறையினர் அவர்கள் இருவரையும் சுற்றி வளைத்துப் பிடித்து காவல்நிலையம் அழைத்துச் சென்றனர். விசாரணையில் அவர்கள் இருவரும் யூடியூப்பை பார்த்து கள்ள நோட்டு அடித்த விவகாரம் வெளிச்சத்திற்கு வந்தது.

ஈரோடு மாணிக்கம்பாளையத்தைச் சேர்ந்த சதீஷ் மற்றும் செளந்திரராஜன் ஆகிய அந்த இருவரும் காரில் ஊர் ஊராக சென்று துணி வியாபாரம் செய்து வந்துள்ளனர். கொரோனா ஊரடங்கால் தொழில் பாதிப்படைந்ததால் செலவுக்கு பணமில்லாமல் தவித்துள்ளனர்.

மாற்று தொழிலை தேடிய இருவருக்கும், தொழில் செய்து பணம் சம்பாதிப்பதை விட நேரடியாக பணத்தையை தயாரித்து விடலாம் என்று விபரீத சிந்தனை தோன்றியுள்ளது. அதன்படி யூடியூப்பிற்குள் சென்று ஹவ் டூ பிரிண்ட் இந்தியன் கரன்சி ? என்று தேடியுள்ளனர்.

அதில் ஜெராக்ஸ் மெசின் மூலம் அச்சு அசலாக கள்ள நோட்டுக்கள் தயாரிக்கும் வீடியோ ஒன்று இருந்துள்ளது. அதனை பார்த்து கலர் ஜெராக்ஸ் இயந்திரத்தை வாங்கி அதன் உதவி கொண்டு 500, 200 மற்றும் 100 ரூபாய் நோட்டுக்களை இருபக்கமும் சரியான அளவில் வைத்து கலர் ஜெராக்ஸ் எடுத்துள்ளனர். முதன் முதலாக தாங்கள் அச்சிட்ட காந்தி நோட்டை வெளிச்சம் குறைவாக உள்ள உணவுக் கடையில் மாற்றும் திட்டத்துடன் சாலையோரக்கடையில் மாற்ற திட்டமிட்டுள்ளனர்.

கடைக்காரரிடம் கொடுத்த 500 ரூபாய் நோட்டுக்கள் நான்கிலும் ஒரே சீரியல் நம்பர் இருந்ததால் கடைக்காரர் எளிதாக அவை கலர் ஜெராக்ஸ் ரூபாய் நோட்டுக்கள் என்று அடையாளம் கண்டு கொண்டதாக கூறப்படுகின்றது.

இருவரும் கள்ள நோட்டை நகல் எடுத்த இடத்திற்கு அழைத்துச்சென்ற போலீசார் இருவரிடமிருந்தும் 500 ரூபாய் நோட்டுக்கள் 22, 200 ரூபாய் நோட்டுக்கள் 17, 100 ரூபாய் நோட்டுக்கள் 57 என மொத்தம் 22 ஆயிரத்து 100 ரூபாயையும், கலர் ஜெராக்ஸ் இயந்திரம், இரு பல்சர் பைக்குகள், கார் ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனர்.

அசல் ரூபாய் நோட்டை நகல் எடுத்து குறுக்கு வழியில் பணக்காரர் ஆக நினைத்த இருவரும் போலீசாரிடம் சிக்கி திகில் அடைந்து நீதிமன்ற உத்தரவுக்கு பின்னர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments


BIG STORY