இருசக்கர வாகன திருட்டை தடுக்க புதிய தொழில்நுட்பம்..!
இருசக்கர வாகன திருட்டை தடுக்கும் வகையில் நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் தீர்வை கண்டறிந்திருக்கிறார்கள் அண்ணா பல்கலைக்கழக ஆராய்ச்சி குழுவினர். இது பற்றி விளக்குகிறது இந்த செய்தி தொகுப்பு..
அண்ணா பல்கலைக்கழகத்தின் "டாக்டர் அப்துல் கலாம் ஆளில்லா விமான ஆராய்ச்சி மையத்தில் பணியாற்றி வரும் கார்த்திக் என்பவர் இருசக்கர வாகன திருட்டை தடுக்க புதிய தீர்வினை கண்டறிந்துள்ளார்.
தற்போது நடைமுறையில் உள்ள ஜிபிஎஸ் கருவிகளால் வேகமாக பேட்டரியின் சக்தி குறைந்து விடும் நிலை இருப்பதுடன், செல்போன் நெட்வொர்க் இல்லாத இடத்தில் இருந்தால்,உடனடியாக தகவல் கிடைப்பதிலும் தாமதம் ஏற்படுகிறது. இவற்றையெல்லாம் கவனத்தில் கொண்டு DIGITAL KEY என்ற நவீன கருவி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
நான்கு எழுத்தில் ரகசிய பாஸ்வேர்ட் போட்டு ஒரு வாகனத்தை லாக் செய்து விட்டால், ஒருவர் கள்ளச்சாவி மட்டுமின்றி சொந்த சாவி போட்டு திறந்தாலும் வாகனங்களை இயக்க முடியாது என்பதே இதன் சிறப்பம்சம்.
இந்த புதிய கருவி நிச்சயம் வாகனங்களின் திருட்டை தடுக்க பேருதவியாக இருக்கும் என்கிறார் தமிழ்நாடு மெக்கானிக் சங்க கூட்டமைப்பின் தலைவர் ஜானகிராமன்.
இரண்டு ஆண்டுகள் கடுமையான உழைப்பில் உருவாக்கிய இந்த கருவியை ஒரு வாகனத்தில் பொருத்த சுமார் 3000 ரூபாய் வரையில் செலவாகும் என்றும், அதில் ஏதேனும் பழுது ஏற்பட்டால் 100 சதவீத மாற்று உண்டு என்றும் கார்த்திக் குறிப்பிட்டார்.
Comments