“அண்ணா பல்கலைக்கழகத்துக்கு உயர் சிறப்பு அஸ்தஸ்து தேவையில்லை” அமைச்சர் சொல்லும் காரணம்
ஏற்கனவே உலகத்தரம் வாய்ந்ததாகத் திகழ்ந்து கொண்டிருக்கும் அண்ணா பல்கலைக்கழகத்துக்கு உயர் சிறப்பு அந்தஸ்து தேவையில்லை என அரசு முடிவெடுத்துள்ளதாக அமைச்சர் கே.பி அன்பழகன் தெரிவித்துள்ளார். உயர் சிறப்பு அந்தஸ்து பெற்றால் வட மாநில மாணவர்கள் அதிக அளவில் சேரும் நிலை ஏற்படும் என்று அவர் கூறியுள்ளார்.
தருமபுரியில் புதிய மின்சார அலுவலக கட்டிடம் மற்றும் பள்ளி கட்டிட அலுவலக திறப்பு விழாவில் கலந்துகொண்ட உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி. அன்பழகன் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அண்ணா பல்கலைக்கழகத்திற்கு உயர் சிறப்பு அந்தஸ்து தேவையில்லை என தமிழக அரசு முடிவெடுத்துள்ளதாகக் கூறிய அமைச்சர், உயர் சிறப்பு அந்தஸ்து வழங்கினால் மாணவர்களுக்கான 69 சதவிகித இடஒதுக்கீடு கேள்விக்குறியாகும் என்றார்.
அண்ணா பல்கலைக்கழகத்துக்கு உயர் சிறப்பு அந்தஸ்து வழங்கினால் மாணவர் சேர்க்கையில் நுழைவுத்தேர்வு வைக்க நேரிடும் என்று கூறிய அமைச்சர், வட மாநில மாணவர்கள் அதிக அளவில் சேர்க்கப்படுவார்கள் என்றார்.
தமிழக மாணவர்களின் கல்வி பாதிக்கப்படக்கூடாது என்பதற்காகவே சிறப்பு அந்தஸ்து தேவையில்லை என்ற முடிவை தமிழக அரசு எடுத்துள்ளது என்று கூறிய அமைச்சர் கே.பி. அன்பழகன், துணைவேந்தர் சுரப்பாவிடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது என்றும் விளக்கம் சரியாக இல்லாமல் இருப்பின் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறினார்.
Comments