உயிரோடு இருந்தவருக்கு இறப்புச் சான்றிதழ் விசாரணையை முடுக்கும் சுகாதாரத்துறை
சேலத்தில் உயிரோடு இருக்கும்போதே குளிர்பதனப் பெட்டிக்குள் வைக்கப்பட்டிருந்த முதியவர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்த நிலையில், அவர் சிறிது நேரத்தில் இறந்துவிடுவார் எனக் கூறி உயிரிழப்பதற்கு முன்பே தனியார் மருத்துவமனை ஒன்று இறப்புச் சான்றிதழ் கொடுத்த அதிர்ச்சி சம்பவமும் அம்பலமாகியுள்ளது.
சேலம் கந்தம்பட்டியைச் சேர்ந்த பாலசுப்பிரமணியக்குமார் என்ற 80 வயது முதியவரை உயிரோடு குளிர்பதனப் பெட்டியில் வைத்து, இறப்பை எதிர்பார்த்து அவரின் சகோதரர் குடும்பத்தோடு காந்திருந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்பத்தியிருந்தது. போலீசாரால் மீட்கப்பட்டு அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட முதியவர் பாலசுப்பிரமணியக்குமாருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் வெள்ளிக்கிழமை காலை சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார். முதியவரின் இரண்டாவது தம்பி சந்திரமவுலியிடம் உடல் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
முதியவரை குளிர்பதனப் பெட்டிக்குள் வைத்த அவரது மூத்த தம்பி சரவணன் மீது இரண்டு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரித்து வரும் நிலையில், சுகாதாரத்துறை அதிகாரிகளும் விசாரணையில் இறங்கியுள்ளனர். அவர்களது முதற்கட்ட விசாரணையில் பாலசுப்பிரமணியகுமார் உயிரோடு இருந்தபோதே அஸ்தம்பட்டியிலுள்ள தனியார் மருத்துவமனை ஒன்று அவருக்கு இறப்புச் சான்றிதழ் கொடுத்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
சம்பவத்தன்று உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்ட பாலசுப்பிரமணியக்குமாரை அந்த தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றதாகவும் அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் 3 மணி நேரத்தில் இறந்துவிடுவார் என்று கூறியதாகவும் கூறப்படுகிறது.
அத்துடன் சகோதரர் சரவணன் கேட்டதற்கு இணங்க, அப்போதே இறப்புச் சான்றிதழையும் மருத்துவமனை நிர்வாகம் அளித்தாக புகார் எழுந்துள்ளது. இந்தப் புகார் குறித்து விசாரணை மேற்கொண்டு வரும் மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள், அதன் அறிக்கையை இந்திய மருத்துவ கவுன்சிலிடம் ஒப்படைக்கவுள்ளதாகத் தெரிவித்தனர்.
Comments