டிக்டாக் காதலால் கர்ப்பமான சிறுமி.. கருக்கலைத்து விரட்டிய காதலன்..! காங்கிரஸ் டாக்டர் - 5 பேர் கைது

0 28948

டிக்டாக் காதலில் விழுந்து காதலனை நம்பி வீட்டை விட்டுச்சென்ற 16 வயது சிறுமி கர்ப்பிணியான நிலையில் சாதிபிரச்சனையால் கருவை கலைத்து காதலன் குடும்பத்தினர் விரட்டிய சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. மைனர் பெண்ணை காதலித்த டிக்டாக் அபிமானியால் குடும்பமே போக்சோ வழக்கில் சிக்கிய சம்பவம் குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு...

ராணிப்பேட்டை மாவட்டம் செங்காடு பகுதியை சேர்ந்த 19 வயது எலக்ட்ரீசியன் சாந்தகுமார். சில மாதங்களுக்கு முன்பு முப்பொழுதும் டிக்டாக்கில் மூழ்கி கிடந்தவருக்கு சென்னை வில்லிவாக்கத்தை சேர்ந்த படிப்பை பாதியில் கைவிட்ட 16 வயது சிறுமியுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

9 ஆம் வகுப்பு வரை பள்ளிக்கு சென்ற அந்த சிறுமியோ டிக்டாக்கிற்கு அடிமையானதால் லைக்கிற்கு ஆசைபட்டு வீடியோ போடுவதில் கவனம் செலுத்தியதால் படிப்பை வீணாக்கி பாதியில் கைவிட்டுள்ளார்.

சாந்தகுமாரின் வீடியோக்களுக்கு லைக்கில் ஆரம்பித்த சிறுமியின் பழக்கம் கமெண்டில் நுழைந்து ஒரு கட்டத்தில் காதலானது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு டிக்டாக் காதலனை தேடி வில்லிவாக்கத்தில் இருந்து ராணிப்பேட்டைக்கு சென்றுள்ளார் அந்த சிறுமி. தீர்த்தகிரி மலைக்கோவிலில் வைத்து அந்த சிறுமியை நண்பர்கள் புடைசூழ திருமணம் செய்து கொண்ட சாந்தகுமார் சந்தோசமாக தனிக்குடித்தனம் நடத்தி வந்தார்.

இந்த நிலையில் அந்த சிறுமி கர்ப்பிணியானதும் அவரை பார்க்க வந்த காதலன் குடும்பத்தினர், சிறுமியின் குடும்பம் குறித்து விசாரித்த போது, அந்த சிறுமி வேறு சாதி பெண் என்பது தெரியவந்ததால் அவரை வீட்டில் இருந்து வெளியே அனுப்பச்சொல்லியுள்ளனர். இதையடுத்து தங்கள் குடும்பத்து வாரிசு கூட அந்த சாதி பெண்ணின் வயிற்றில் வளரக்கூடாது என்று ஆத்திரப்பட்ட சாந்தகுமாரின் உறவினர்கள் பிரபல போலி டாக்டர் பாஷாவிடம் அந்த சிறுமியை அழைத்து சென்று கருக்கலைப்பு செய்துள்ளனர்.

பாஷா பலமுறை போலீசில் சிக்கினாலும் தொடர்ந்து கிளினிக் நடத்திவருபவர் என்று கூறப்படுகின்றது. அதன் பின்னர் டிக்டாக் காதலன் சாந்தகுமார் குடும்பத்தினர் அந்த சிறுமியை வீட்டிற்குள் நுழைய விடாமல் விரட்டியடித்ததால் வீதியில் தவிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார் அந்த சிறுமி..!

சிறுமியின் நிலையறிந்த சிலர் அவரை அங்குள்ள அரசு காப்பகத்தில் தங்கி இருக்க ஏற்பாடு செய்து கொடுத்தனர். அங்கிருந்து சைல்டு ஹெல்ப்லைன் மூலமாக சமூக நல பாதுகாப்பு துறை அதிகாரிகளை தொடர்பு கொண்ட சிறுமி, தனக்கு நடந்த சம்பவங்கள் குறித்து தெரிவித்ததோடு ராணிப்பேட்டை மகளிர் காவல் நிலையத்திலும் புகார் அளித்தார்

இதையடுத்து அச்சிறுமியை குழந்தை திருமணம் செய்த டிக்டாக் காதலன் சாந்தகுமார் அவனது தாய் வளர்மதி சித்தி, அவனது மாமா செல்வராஜ் மற்றும் வழக்கம் போல போலி மருத்துவர் பாஷா ஆகிய 5 பேரையும் போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட போலி டாக்டர் பாஷா காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியுடன் இருப்பது போன்ற போட்டோவை கிளினிக்கில் மாட்டிவைத்து, தன்னை காங்கிரஸ் பேரியக்கத்தை சேர்ந்தவர் போல காட்டிக் கொண்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

தந்தை - தாயின் அருமை தெரியாமல் டிக்டாக் காதலனை நம்பிச்சென்று ஆதரவின்றி தவித்த அச்சிறுமியை அகழ்வாரை தாங்கும் நிலம் போல மன்னித்து மீண்டும் ஏற்றுக் கொண்டார் சிறுமியின் தந்தை..!

அதே நேரத்தில் சீனாவின் நாசகரச்செயலியான டிக்டாக் தடை செய்யப்பட்டு மாதங்கள் பல கடந்தாலும், அதன் தாக்கம் இன்னும் சில ஆண்டுகளுக்கு டிக்டாக் அடிமைகளின் வாழ்வில் தொடரும் என்பதற்கு இந்த சம்பவமே சாட்சி..!

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments