உலகின் மிகப்பெரிய வெடிகுண்டு - 75 ஆண்டுகளுக்குப் பிறகு வெடித்துச் சிதறியது!
இரண்டாம் உலகப் போரில், ஜெர்மன் போர்க்கப்பலை அழிக்கப் பயன்படுத்தப்பட்ட, உலகிலேயே மிகப்பெரிய வெடிகுண்டு ஒன்று போலந்து நாட்டில் கண்டுபிடிக்கப்பட்டது. 5400 கிலோகிராம் எடைகொண்ட வெடிகுண்டை செயலிழக்கச் செய்தபோது வெடித்துச் சிதறியது...
இரண்டாம் உலகப்போரின் போது, 1945 - ம் ஆண்டு பிரிட்டனின் ராயல் விமானப் படையினர், ஜெர்மன் போர்க்கப்பல் லுட்ஸோவை அழிக்கும் நோக்கத்தில், 6 மீ நீளம் கொண்ட 5400 கிலோ கிராம் எடைகொண்ட மிகப்பெரிய வெடிகுண்டை வீசினர். இந்த வெடிகுண்டில் 2400 கிலோ கிராம் அளவுக்கு வெடிபொருள் நிரப்பப்பட்டிருந்தது. ‘பெரிய பையன்’ என்று பெயரிடப்பட்ட இந்த வெடிகுண்டு மிகச்சிறிய அளவில் நிலநடுக்கத்தை ஏற்படுத்தும் அளவுக்குச் சக்தி வாய்ந்ததாகும்.
ஜெர்மன் - போலந்து எல்லையில் உள்ள ஸ்வினூஜ்ஸி நகரில் கப்பல் போக்குவரத்துக்குப் பயன்படும் பியஸ்ட் கால்வாயில், கடந்த ஆண்டு இந்த வெடிகுண்டு வெடிக்காத நிலையில் கண்டெடுக்கப்பட்டது.
ஸ்வினூஜ்லி நகரில் இயற்கை எரிவாயு முனையம் அமைந்துள்ளது. வெடிகுண்டைச் செயலிழக்கச் செய்யும் போது வெடித்துச் சிதறினால் மிகப்பெரிய அளவுக்கு அசம்பாவிதம் ஏற்படும் என்பதால், கடற்படை அதிகாரிகள் மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்பட்டனர். மிக நீண்ட ஆலோசனை மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்குப் பிறகு பியஸ்ட் கால்வாயில் வெடிகுண்டை நீருக்கடியில் செயலிழக்கச் செய்ய முடிவு செய்தனர். அதனால், 2.5 கிலோ மீட்டர் சுற்றளவுக்குப் பாதுகாக்கப்பட்ட மண்டலமாக அறிவித்து, அங்கு வசித்த 750 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் அப்புறப்படுத்தப்பட்டனர்.
வெடிகுண்டை பியஸ்ட் கால்வாய் நீரில் மூழ்கியபடி செயலிழக்கச் செய்யக் கடற்படை வீரர்கள் முயன்றனர். அப்போது, யாரும் எதிர்பாராத வகையில் வெடிகுண்டு வெடித்துச் சிதறியது. நல்ல வேளையாக, இந்த வெடி விபத்தில் கடற்படை வீரர்களுக்கு எந்த ஆபத்தும் ஏற்படாமல் தப்பியுள்ளனர்.
இதுகுறித்து, கடலோர பாதுகாப்புப் படையின் செய்தித் தொடர்பாளர் லெப்டினன்ட் க்ரெஸ்கோர்ஸ் லெவாண்டோவ்ஸ்கி, “நீருக்கடியில் இந்த வெடிகுண்டை யாருக்கும் காயம் ஏற்படாமல், எந்த வித கட்டுமானத்துக்கும் ஆபத்து ஏற்படாமல் செயலிழக்கச் செய்துள்ளோம்” என்று தெரிவித்துள்ளார்.
Comments