பள்ளிகள் திறந்த நிலையில் மாணவருக்கு கொரோனா..! 3 நாளில் மூடப்பட்ட வகுப்புகள்

0 4983
பள்ளிகள் திறந்த நிலையில் மாணவருக்கு கொரோனா..! 3 நாளில் மூடப்பட்ட வகுப்புகள்

ஆந்திராவை தொடர்ந்து புதுச்சேரியிலும் பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில் பள்ளி மாணவர் ஒருவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டதால்  அவர் சென்று வந்த வகுப்புகள் இழுத்துப்பூட்டப்பட்டன.

பள்ளிகளுக்கு வரும் மாணவ மாணவிகளுக்கு பரிசோதனையை தீவிரப்படுத்த ஆளுநர் கிரண்பேடி உத்தரவிட்டுள்ளார்

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பது குறித்து அரசு இன்னும் அறிவிப்பு வெளியிடாத நிலையில் ஆந்திராவில் பள்ளிகள் திறக்கப்பட்ட ஒரு சில தினங்களிலேயே 50க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர் கொரோனா பாதிப்புக்குள்ளாயினர்.

இந்த நிலையில் கடந்த 4 நாட்களுக்கு முன்பு புதுச்சேரி அரசு பள்ளிகளை திறக்க உத்தவிட்டது. முறையான வழிகாட்டு நெறிமுறைகளோடு 9,10,11, மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டது.

மாணவர்கள் அனைவரும் தனி நபர் இடைவெளியுடன் பள்ளிக்குள் தெர்மல் ஸ்கேனிங் செய்து அனுமதிக்கப்பட்டனர். வகுப்பறையில் அமர வைக்காமல் மாணவர்கள் திறந்த வெளியில் மர நிழலில் அமரவைத்து ஆசிரியர்கள் வகுப்பு எடுத்தனர்

இதற்கிடையே புதுச்சேரி காராமணிக்குப்பம் ஜீவானந்தம் அரசு பள்ளி திறந்த 3 வது நாளிலேயே 12 ஆம் வகுப்பு மாணவர் ஒருவருக்கு உடல் வெப்ப நிலை சோதனையில் காய்ச்சல் அறிகுறி கண்டறியப்பட்டதால் அவருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

ஆய்வில் அவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து அந்த பள்ளிக்கு விடுமுறை விடப்பட்டது. அவர் சென்று வந்த வகுப்புகள் முழுவதும் கிருமி நாசினி தெளித்து இழுத்து பூட்டப்பட்டன.

செவ்வாய்கிழமை வழக்கம் போல 9 மற்றும் 11 ஆம் வகுப்புகள் செயல்பட தொடங்கிய நிலையில் மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் மாணவர்களுக்கு தெர்மல் ஸ்கேனிங் மற்றும் தனி நபர் இடைவெளி, முககவசம் ஆகியவற்றை கட்டாயமாக்கி அதனை ஆசிரியர்கள் பின்பற்ற வேண்டும் என்று புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண் பேடி உத்தரவிட்டுள்ளார்

பள்ளி செல்லும் மாணவ மாணவிகள் அனைத்து வகுப்புகளுக்கும் வரத்தொடங்கினால் இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்பதால் பாடங்களில் சந்தேகம் உள்ள மாணவர்களை மட்டும் பள்ளி வரவழைத்து கற்றுக் கொடுப்பதாக புதுச்சேரி பள்ளிக்கல்வித்துறை விளக்கம் அளித்துள்ளது

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments