பாஜகவில் இணைந்தார் குஷ்பூ
காங்கிரஸ் தேசிய செய்தித் தொடர்பாளர் பதவி காலையில் பறிக்கப்பட்ட நிலையில், அக்கட்சியில் இருந்து விலகிய நடிகை குஷ்பூ, பிற்பகலில் பாஜகவில் இணைந்துள்ளார்.
திமுகவில் இருந்து விலகி பின்னர் காங்கிரசில் சேர்ந்த நடிகை குஷ்பூ, பாஜகவில் இணைய உள்ளதாக கடந்த சில நாட்களாகவே ஊகத் தகவல்கள் உலா வந்தன. ஒரு ட்வீட்டுக்கு 2 ரூபாய் வாங்கிக் கொண்டு, தான் பாஜகவில் சேரப்போவதாக வதந்தி பரப்புகிறார்கள் என குஷ்பூ குற்றம்சாட்டியிருந்தார்.
இந்நிலையில், பாஜக அலுவலகம் சென்ற குஷ்பூ, அங்கு பாஜக பொதுச்செயலாளர் சி.டி.ரவி, தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் முன்னிலையில், அக்கட்சியில் இணைந்தார். மோடியின் தலைமைதான் நாட்டுக்குத் தேவை என்றும், அர்ப்பணிப்பு உணர்வோடு சாதாரண தொண்டராக பாஜகவிற்கு பணியாற்றப்போவதாகவும் குஷ்பூ தெரிவித்தார்.
முன்னதாக, காங்கிரஸ் தேசிய செய்தித் தொடர்பாளர் பதவி குஷ்பூவிடம் இருந்து பறிக்கப்பட்டது. அதேசமயம், காங்கிரஸ் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்தே விலகுவதாக, அக்கட்சியின் தலைவர் சோனியா காந்திக்கு குஷ்பூ எழுதிய கடிதமும் வெளியானது.
காங்கிரசில் உயர்பதவிகளில் உள்ள சிலர், கட்சிக்கு உண்மையாக உழைப்பவர்களுக்கு மதிப்பதில்லை என்பதோடு நசுக்கப்படுவதாகவும் அந்த கடிதத்தில் குஷ்பூ குற்றம்சாட்டியிருந்தார்.
ஆனால், குஷ்பூ பா.ஜ.க.வில் சேருவதற்கு அவரது கணவர் சுந்தர்.சி நிர்ப்பந்தம் காரணம் என்று கூறப்படுவதாக தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி கூறியுள்ளார். குஷ்பூ மூளைச் சலவை செய்யப்பட்டுள்ளதாகவும், அவர் பா.ஜ.க.வில் சேர்ந்ததனால் எந்த லாபமும் அந்த கட்சிக்கு ஏற்படப்போவதில்லை என்றும் கே.எஸ்.அழகிரி குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே, கூட்டணிக் கட்சியான பாஜகவில் குஷ்பூ இணைந்திருப்பது மகிழ்ச்சி அளிப்பதாகத் தெரிவித்துள்ள அமைச்சர் ஜெயக்குமார், குஷ்பூ எங்கிருந்தாலும் வாழ்க என வரவேற்பு தெரிவித்துள்ளார்.
Comments