லடாக் எல்லையில் ராணுவ அதிகாரிகள் மட்டத்தில் இன்று மீண்டும் பேச்சுவார்த்தை

0 1289
லடாக் எல்லையில் ராணுவ அதிகாரிகள் மட்டத்தில் இன்று மீண்டும் பேச்சுவார்த்தை

இந்தியா- சீனா இடையே இன்று ராணுவ அதிகாரிகள் மட்டத்தில் பேச்சுவார்த்தை நடைபெறுகிறது. லடாக் மலைச்சிகரங்களில் குவிக்கப்பட்டுள்ள படைகளை சீனா திரும்பப் பெற வேண்டும் என இக்கூட்டத்தில் இந்தியா  வலியுறுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

லடாக்கில் அசல் எல்லைக்கோடு பகுதியின் சில பகுதிகளுக்கு சீனா உரிமை கோரி வருகிறது.

பாங்-காங் சோ (Pang-gong -Tso) மலைப்பகுதிகளில் சீனப்படைகள் குவிக்கப்பட்டுள்ளதையடுத்து எல்லையில் கடந்த சில மாதங்களாக பதற்றமான சூழ்நிலை காணப்படுகிறது.

சீனாவின் விபரீத நோக்கத்தை முறியடிக்க இந்தியா தனது போர் விமானங்களை தயார் நிலையில் லே விமானப்படைத்தளத்தில் நிறுத்தி வைத்துள்ளது. கடந்த 35 நாட்களில் பத்து ஏவுகணை சோதனைகளையும் நடத்தி வருகிறது.

இந்நிலையில் இன்று நண்பகல் 12 மணிக்கு எல்லையை ஒட்டிய சூசல் (Chushal) பகுதியில் ராணுவ கமாண்டர்கள் மட்டத்திலான ஏழாவது சுற்று பேச்சுவார்த்தை நடைபெறுகிறது.

இன்றைய பேச்சுவார்த்தையில் மலைப்பகுதியின் உச்சியில் குவிக்கப்பட்டுள்ள படைகளை திரும்பப் பெற இந்தியா சீனாவுக்கு நெருக்குதல் கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கமாண்டர் ஜெனரல் ஹரிந்தர் சிங் தலைமையிலான இந்திய ராணுவ உயர் அதிகாரிகள் இன்றைய பேச்சுவார்த்தையில் பங்கேற்கின்றனர். சீனா தரப்பில் அந்நாட்டு அரசு அதிகாரி ஒருவரும் பேச்சுவார்த்தையில் கலந்து கொள்கிறார்.

முன்னதாக இன்றைய பேச்சுவார்த்தை அம்சங்கள் குறித்து விவாதிக்க டெல்லியில் நேற்று ஆய்வுக்குழுக் கூட்டம் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் முப்படைகளின் தலைவர் பிபின் ராவத் மற்றும் முப்படைத் தளபதிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments