டிஎன்பிஎஸ்சி முறைகேடு வழக்கு... கைதான 6 பேர் ஜாமீனில் விடுவிப்பு
டிஎன்பிஎஸ்சி முறைகேடு வழக்கில் சிபிசிஐடி போலீசாரால் கைது செய்யப்பட்ட அரசு அதிகாரிகள் உள்பட 6 பேர், விசாரணைக்குப் பிறகு ஜாமீனில் விடுவிக்கப்பட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்திய தேர்வில் ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் ஒரே மையத்தில் தேர்வெழுதிய வெளிமாவட்டத்தினர் 99 பேர் தேர்ச்சி பெற்றதால் தேர்வில் முறைகேடுகள் நடந்ததாகப் புகார்கள் எழுந்தன.
இது குறித்து விசாரித்த சிபிசிஐடி போலீசார் முறைகேட்டுக்குத் துணைபோன அரசு ஊழியர்கள், இடைத்தரகர் உட்பட ஐம்பதுக்கு மேற்பட்டோரைக் கைது செய்தனர்.
கொரோனா சூழலில் வழக்கைக் கிடப்பில் போட்டு விட்டதாகக் கூறப்பட்டது.
இந்நிலையில் இந்த வழக்கை விரைந்து விசாரித்து குற்றப் பத்திரிகை தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டது.
சிபிசிஐடி ஐஜி சங்கர் தலைமையில் போலீசார் மீண்டும் விசாரணையைத் தொடங்கினர்.
அரசு அதிகாரிகள், இடைத்தரகர்கள் உள்பட 6 பேரைக் கைது செய்ததாகவும், விசாரணைக்குப் பின் அவர்களை ஜாமீனில் விடுவித்ததாகவும் சிபிசிஐடி போலீசார் தெரிவித்துள்ளனர்.
அவர்களின் பெயர் விவரங்களை வெளியிட சிபிசிஐடி போலீசார் மறுத்து விட்டனர். மேலும் தலைமறைவாக உள்ள இருபதுக்கு மேற்பட்டோரைத் தேடி வருவதாகக் கூறப்படுகிறது.
Comments