அடுத்த 24 மணி நேரத்தில் 6 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும்: சென்னை வானிலை ஆய்வு மையம்
மத்திய மற்றும் தென் கிழக்கு வங்க கடலில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் 6 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்த அறிவிப்பில், நேற்று மத்திய மற்றும் தென் கிழக்கு வங்க கடலில் நிலைகொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலு பெற்றுள்ளதாகவும், அதன் காரணமாக, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒருசில இடங்களில் இடியுடன் கூடிய மிதமான மழையும், கிருஷ்ணகிரி, தருமபுரி, நீலகிரி, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை ஆகிய 6 மாவட்டங்களில் கனமழையும் பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும் என்பதால், குமரிக்கடல் மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளில் மணிக்கு 45-55 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்றுவீசும் என்றும், மீனவர்கள் அங்கு செல்ல வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Comments