சீனாவுக்கு எச்சரிக்கை - ஏவுகணை சோதனையில் இந்தியா
இந்திய சீன எல்லையில் நிலவும் பதற்றமான சூழ்நிலையில் கடந்த 35 நாட்களில் இந்தியா பத்து ஏவுகணைகளைப் பரிசோதனை செய்துள்ளது தற்செயலானதல்ல என்று பாதுகாப்புத்துறை நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பான DRDO மேக் இன் இந்தியா என்ற உள்நாட்டுத் தயாரிப்புத் திட்டத்தின் கீழ் பல்வேறு ஏவுகணைகளைப் தயாரித்து பரிசோதித்து வருகிறது.
லடாக் அசல் எல்லைக் கட்டுப்பாடு கோடு பகுதியில் படையினரைக் குவித்துள்ள சீனா பின்வாங்க மறுப்பதால் இந்தியா பாதுகாப்பு நடவடிக்கைளை மேற்கொண்டு வருகிறது.
அடுத்த வாரத்தின் தொடக்கத்தில் 800 கிலோமீட்டர் தூரம் வரை சென்று தாக்கக்கூடிய நிர்பய் ஏவுகணையை இந்தியா பரிசோதனை செய்ய உள்ளது.
கடந்த 35 நாட்களில் பரிசோதிக்கப்படும் 10 வது ஏவுகணை இதுவாகும். ஒரு மாதத்தில் நான்கு நாட்களுக்கு ஒரு முறை என்ற கணக்கில் ஏவுகணை சோதனைகள் நடத்தப்படுகின்றன.
கடந்த செப்டம்பர் 7ம் தேதி HSTDV என்ற முதல் ஏவுகணை வெற்றிகரமாகப் பரிசோதனை செய்யப்பட்டது.
தொடர்ந்து 400 கிலோமீட்டர் இலக்கைத் தாக்கக்கூடிய பிரம்மோஸ் ஏவுகணை பரிசோதனை செய்யப்பட்டது.
பிருத்வி 2 ஏவுகணையையும் டி.ஆர்.டி.ஓ .விஞ்ஞானிகள் பரிசோதனை செய்துள்ளனர்.ஒலியை விட மூன்று மடங்கு வேகமாக செல்லும் சவுரியா ஏவுகணையும் அணு ஆயுதம் சுமந்து செல்லக்கூடியது.
பரிசோதிக்கப்பட்ட ஏவுகணைகளை லடாக் எல்லையில் முக்கிய இடங்களில் நிறுத்தி வைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சீனாவின் நடவடிக்கையில் இந்திய அரசுக்கு ஏற்பட்டுள்ள சந்தேகம் காரணமாக இந்த நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாக பாதுகாப்பு துறை சார்ந்த நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
Comments