மாடியில் இருந்து தவறி விழுந்த சிறுவனை காப்பாற்றிய வியாபாரி..! கை கொடுத்த சகோதரி

0 7751
மாடியில் இருந்து தவறி விழுந்த சிறுவனை காப்பாற்றிய வியாபாரி..! கை கொடுத்த சகோதரி

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே தோப்புப்பட்டி கிராமத்தில் மாடியில் இருந்து தவறி விழுந்த சிறுவன், அவனது 6 வயது சகோதரியின் கைகளை பற்றிக் கொண்டு உயிருக்கு போராடிய நிலையில் தெருவில் சென்ற வியாபாரி ஒருவரால் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளான்.

திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே  தோப்புப்பட்டியில் தாய் தந்தை வேலைக்கு சென்று விட வீட்டின் மாடியில் 3 வயது சிறுவன் தனது 6 வயது சகோதரியுடன் விளையாடிக் கொண்டிருந்தான்.

அப்போது மாடியின் கைப்பிடி சுற்று சுவரில் அமர்ந்திருந்த சிறுவன் எதிர்பாராத விதமாக இடறி விழ அவனை அருகில் நின்ற சகோதரி கை கொடுத்து காப்பாற்ற முயன்றுள்ளாள், ஆனால் தவறிவிழுந்த சிறுவனை முழுவதுமாக மேலே தூக்க இயலவில்லை. இரண்டு பிஞ்சுகளுமே பயத்தில் அலறியுள்ளனர்.

இதனை பார்த்த பக்கத்து வீட்டுப்பெண்ணோ அந்த சிறுவனை காப்பாற்ற முயலாமல் அவசர அவசரமாக தனது செல்போனில் படம் பிடித்தபடியே அந்த வீட்டை நோக்கி ஓடியுள்ளார். அந்த வீட்டின் சுற்று அவர் அருகே சென்ற அவர் மனிதம் மறந்து அதனை படம் பிடிப்பதில் ஆர்வம் காட்டியுள்ளார்.

இதற்கிடையே சிறுவனின் அபயக்குரல், அந்த வழியாக சைக்கிளில் ஓமதிரவம் உள்ளிட்டவற்றை விற்றுச்சென்ற இளாங்குறிச்சியை சேர்ந்த முகமதுஷாலிக் என்ற வியாபாரியின் காதுகளில் விழுந்துள்ளது. அவர் உடனடியாக தனது சைக்கிளை நிறுத்திவிட்டு வீட்டுக்குள் சென்று அந்த சிறுமியை கையை விடச்செய்து மேலிருந்து கீழே விழுந்த சிறுவனை பத்திரமாக தாங்கிப்பிடித்து காப்பாற்றினார்.

இதனை படம் பிடித்த பக்கத்து வீட்டுப்பெண் கடைசிவரை காப்பாற்ற முயலாமல் வீடியோ எடுத்து, அதனை தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். வியாபாரியை பாராட்டும் நெட்டிசன்கள் வீடியோ எடுத்தவரை வார்த்தைகளால் வறுத்தெடுத்து வருகின்றனர்.

யாரென்றே தெரியாத வியாபாரி நடக்க இருக்கும் விபரீதத்தை உணர்ந்து விரைந்து சென்று காப்பாற்றிய நிலையில் படம் பிடித்த பக்கத்து வீடுப்பெண்ணின் அருகில் இருந்து, நன்றாக படம் பிடிக்கும் படி கூறிய உரையாடல் அந்த வீடியோவில் இடம் பெற்று உள்ளது.

வியாபாரியை போன்ற மனித நேயமிக்கவர்கள் வாழும் இதே ஊரில் தான் கடைசி வரை வீடியோ மட்டும் எடுத்துக் கொண்டு உதவிக்கு செல்லக்கூட மனமில்லா வேடிக்கை மனிதர்களும் வாழ்கின்றனர்..!

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments