சினிமா தயாரிப்பாளர் அன்புராஜன் தம்மை மிரட்டியதாக நடிகர் சூரி புகார்
சினிமா தயாரிப்பாளர் அன்புராஜன் தம்மை மிரட்டப்பட்டதாகவும், 5 ஆண்டுகளாக கடுமையான மன உளைச்சலில் இருந்ததாகவும் நடிகர் சூரி கூறியுள்ளார்.
அங்கீகாரம் இல்லாத, முறையான பாதை இல்லாத நிலத்தை தன்னிடம் விற்று 3 கோடியே 10 லட்ச ரூபாயை ஏமாற்றி விட்டதாக தயாரிப்பாளர் அன்புராஜன், நடிகர் விஷ்ணு விஷாலின் தந்தையும் முன்னாள் டிஜிபியுமான ரமேஷ் குடவாலா ஆகியோர் மீது நடிகர் சூரி புகாரளித்திருந்தார்.
அதனடிப்படையில் இருவர் மீதும் 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில், அன்புராஜன் தன்னை மறைமுகமாக மிரட்டியதாகவும் அதன் காரணமாக கடந்த 5 ஆண்டுகளாக மன உளைச்சலுடனேயே படப்புகளில் கலந்துகொண்டதாகவும் சூரி தெரிவித்துள்ளார்.
அன்புராஜன் தரப்பு பணத்தைக் கொடுக்கும் எண்ணத்திலேயே இல்லை என்றும் அவர்கள் மீது நம்பிக்கை இழந்த பிறகே புகாரளித்ததாகவும் அவர் கூறியுள்ளார்.
Comments