தரையில் அமர வைக்கப்பட்ட ஊராட்சி மன்ற பட்டியலின பெண் தலைவர்... கடலூர் மாவட்டத்தில் நடந்த அதிர்ச்சி!
பட்டியலினத்தவர் என்பதால் ஊராட்சிமன்ற பெண் தலைவரைத் தரையில் அமர வைத்து ஊராட்சி மன்ற கூட்டம் நடத்திய சம்பவம் புவனகிரியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடலூர் மாவட்டம், சிதம்பரம் அருகே தெற்குதிட்டை பஞ்சாயத்து துணைத் தலைவராக ராஜேஷ்வரி என்பவரும் துணைத்தலைவராக மோகன் என்பவரும் இருக்கின்றனர். ஊராட்சி மன்றத் தலைவர் ராஜேஷ்வரி பட்டியலினத்தைச் சேர்ந்தவர். கடந்த ஜூலை 17 - ம் தேதி நடந்த ஊராட்சி மன்ற கூட்டத்தில் ராஜேஷ்வரியைத் தரையில் அமர வைத்து கூட்டம் நடத்தியுள்ளனர். இது தொடர்பான புகைப்படம் சமூகவலைத் தளங்களில் பரவியது.
இதைத் தொடர்ந்து புவனகிரி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்ட போது, நடந்த சம்பவம் உண்மைதான் என்று தெரிய வந்தது. தொடர்ந்து, துணைத்தலைவர் மோகன் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மோகன் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. கடலூர் மாவட்ட நிர்வாகமும் இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகிறது. இந்த சம்பவம் நடந்தபோது மேலதிகாரிகளுக்கு புகார் அளிக்காத ஊராட்சி செயலாளர் பணியிடை நீக்கம் செய்து கடலூர் மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
இது குறித்து ராஜேஷ்வரி கூறுகையில், ''பஞ்சாயத்து கூட்டத்தின் போது நீ தரையில்தான் உட்காரனும். நான்தான் எல்லாம் செய்வேன் என்று மோகன் சொல்வார். அதனால், நானும் கீழே உட்கார்ந்திருப்பேன். கொடி ஏற்றும் போதும் நான்தான் ஏற்றுவேன். நீ ஏற்றக் கூடாது என்று சொல்லி விடுவார். நானும் அனுசரித்து போவேன். ஒரு கட்டத்துக்கு மேல் அவரது தொந்தரவு தாங்க முடியாமல் நான் நடவடிக்கை எடுக்க முடிவு செய்தேன்'' என்கிறார்.
தெற்கு திட்டை ஊராட்சி மன்ற அலுவலகத்திற்கு நேரடியாகச் சென்ற மாவட்ட ஆட்சியர் சந்திரசேகர் சகாமுரி, கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீ அபினவ் ஆகியோர், ஊராட்சி மன்ற தலைவர், உறுப்பினர்கள் மற்றும் செயலாளர் சிந்துஜாவிடம் விசாரணை நடத்தினர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த மாவட்ட ஆட்சியர், ஊராட்சி மன்ற துணைத் தலைவரை போலீஸ் தேடி வருவதாக கூறினார். ஊராட்சி மன்ற தலைவருக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெரிவித்தார்.
இதற்கிடையே, கடலூர் மாவட்டம் சிதம்பரத்தை அடுத்த தெற்குத்திட்டை ஊராட்சி மன்ற, தலித் பெண் தலைவர் தரையில் அமர வைக்கப்பட்ட விவகாரத்தில், பஞ்சாயத்துச் செயலாளர் சிந்துஜா கைது செய்யப்பட்டுள்ளார். தலித் தலைவர் தரையில் அமர வைக்கப்பட்ட விவகாரத்தில், முறையாக கையாண்டு, தகவல் தெரிவிக்காத சூழலில், கடலூர் மாவட்ட நிர்வாகத்தால், பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். இதுதொடர்பாக, புவனகிரி காவல்நிலைய போலீசார் வழக்குப்பதிவு விசாரணை நடத்திய நிலையில், தெற்குத்திட்டை ஊராட்சி மன்றச் செயலாளர் சிந்துஜாவை, மாலையில், கைது செய்தனர்.
இதனிடையே, தெற்குத்திட்டை ஊராட்சி மன்ற, 5ஆவது வார்டு உறுப்பினராக உள்ள சுகுமாறன் என்பவரை, புவனகிரி போலீசார் கைது செய்துள்ளனர். தரையில் அமர வைக்கப்பட்ட தலித் பெண் தலைவர் ராஜேஸ்வரியின் வீட்டிற்கு, கடந்த 2 நாட்களுக்கு முன்பு சென்று மிரட்டிய புகாரில், அவர் கைது செய்யப்பட்டிருக்கிறார். சுகுமாறன் மீது, எஸ்.சி & எஸ்.டி வன்கொடுமை தடுப்புச் சட்டம், கொலை மிரட்டல் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ், புவனகிரி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
Comments