தாய் கொடுத்த பாலே விஷமானால்..? கொலையான பிஞ்சு..! கொரோனா வறுமை கொடூரம்

0 23990
விழுப்புரம் அருகே ஊரடங்கில் பிறந்த பெண் குழந்தையை வளர்க்க இயலாமல் கஷ்டப்பட்ட பெண் ஒருவர் பாலில் விஷம் கலந்து கொடுத்து கொலை செய்த அதிர்ச்சி சம்பவம் பிணக்கூறாய்வு மூலம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

விழுப்புரம் அருகே ஊரடங்கில் பிறந்த பெண் குழந்தையை வளர்க்க இயலாமல் கஷ்டப்பட்ட பெண் ஒருவர் பாலில் விஷம் கலந்து கொடுத்து கொலை செய்த அதிர்ச்சி சம்பவம் பிணக்கூறாய்வு மூலம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

விழுப்புரம் பாப்பான்குளம் பகுதியை சேர்ந்தவர் சாதிக்பாஷா தனியார் பேருந்து ஒன்றில் நடத்துனராக பணிபுரிந்து வந்தார். ஊரடங்கு காரணமாக பேருந்துகள் இயக்கப்படாத நிலையில் போதிய வருமானம் இன்றி தவித்து வந்தார். இந்த நிலையில் கர்ப்பிணியாக இருந்த அவரது மனைவி யாஸ்மினுக்கு கடந்த 5 மாதங்களுக்கு முன் மூன்றாவதாக பெண் குழந்தை ஒன்று பிறந்தது.

ஆலையாபானு என்று பெயரிடப்பட்ட அந்த குழந்தை பிறந்து மூன்று மாதங்களே ஆன நிலையில் கடந்த ஆகஸ்ட் மாதம் 28 ஆம் தேதி இரவு தாய் யாஸ்மின், பால் கொடுத்து தூங்க வைத்த நிலையில் மறுநாள் காலை குழந்தை அசைவின்றி கிடந்துள்ளது. அந்த குழந்தையை முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு கொண்டு சென்றனர். அங்கு குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தை ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.

நன்றாக இருந்த குழந்தை இறந்ததை ஏற்றுக் கொள்ள முடியாத குழந்தையின் தந்தை சாதிக்பாஷா, தனது குழந்தையின் இறப்பில் சந்தேகம் இருப்பதாக விழுப்புரம் மேற்கு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து இறந்த குழந்தையின் சடலத்தை உடல்கூராய்வுக்கு அனுப்பி வைத்தனர். உடற்கூறு ஆய்வின் பரிசோதனை முடிவுகள் ஒரு மாதம் கழித்து வியாழக்கிழமை வெளியானது.

இதில் உயிரிழப்பதற்கு முந்தைய நாள் இரவில் குழந்தை அருந்திய பாலில் விஷம் கலந்திருப்பது தெரியவந்தது. இதனையடுத்து குழந்தையின் பெற்றோரை அழைத்து மேற்கு காவல் நிலைய ஆய்வாளர் ரேவதி தலைமையிலான போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.

விசாரணையில், ஏற்கனவே ஒரு மகனும், ஒரு மகளும் உள்ள நிலையில் , கொரோனா ஊரடங்கால் பேருந்துகள் இயங்காமல், கணவர் வேலை இழந்து வருமானமின்றி மொத்த குடும்பமும் தவித்த சூழலில் 3வதாக பிறந்த பெண் குழந்தையை எப்படி வளர்த்து கரைசேர்க்க போகிறோம் ? என்று எண்ணி பாலில் பூச்சி மருந்தை கலந்து கொடுத்து தனது பச்சிளம் பெண் குழந்தையை கொலை செய்ததை தாய் யாஸ்மின் ஒப்புக் கொண்டுள்ளார்.

இதனையடுத்து குழந்தை மர்ம மரண வழக்கை கொலை வழக்காக பதிவு செய்த போலீசார், குழந்தையின் தாய் யாஸ்மினை கைது செய்தனர். பின்னர் அவரை விழுப்புரம் கோர்ட்டில் ஆஜர்படுத்தி கடலூர் சிறையில் அடைத்தனர்.

வறுமையின் காரணமாக பெற்ற குழந்தையை வளர்க்க இயலாதவர்கள் தமிழக அரசின் சமூக நலத்துறையின் கீழ் இயங்கும் தொட்டில் குழந்தை திட்டத்தில் தங்கள் குழந்தையை கொண்டு சேர்த்திருக்கலாம். அல்லது குழந்தை இல்லாமல் ஏங்கித்தவிக்கும் ஏதாவது தம்பதிக்கு சட்டப்படி தத்துக் கொடுத்திருக்கலாம் அதைவிடுத்து பாலில் விஷம் கலந்து கொள்வது பெண் சிசுவுக்கு கள்ளிப்பால் கொடுத்து கொல்லும் நிகழ்வுக்கு சமமான கொடுமை..! என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments