வறட்சியைத் தாங்கும் வகையில் மரபணு மாற்றியமைக்கப்பட்ட கோதுமைக்கு - அர்ஜெண்டினா ஒப்புதல்!

0 1232
வறட்சியைத் தாங்கும் வகையில் மரபணு மாற்றியமைக்கப்பட்ட கோதுமைக்கு - அர்ஜெண்டினா ஒப்புதல்!

உலகின் முதல் நாடாக, வறட்சியைத் தாங்கும் வகையில், மரபணு மாற்றியமைக்கப்பட்ட கோதுமைக்கு அர்ஜெண்டினா அரசு அனுமதி அளித்துள்ளது.

விரைவில் வணிக ரீதியில் மரபணு மாற்றியமைக்கப்பட்ட கோதுமை உற்பத்தி அர்ஜெண்டினாவில் தொடங்கப்படவுள்ளது.

உலக சந்தையில், கோதுமை ஏற்றுமதியில் 5.1 சதவிகித வருடாந்திர பங்களிப்பைக் கொண்டுள்ள அர்ஜெண்டினா, கோதுமை ஏற்றுமதியில் எட்டாவது இடத்தில் உள்ளது. ஆனால், சமீப காலமாக சாதகமற்ற வானிலை நிலவுவதால் கோதுமை உற்பத்தி பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக, நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் தீவிரமாக உறைபனி ஏற்பட்டுள்ளதால் கோதுமை உற்பத்தி சரிந்தது. இந்த பாதிப்பால் கடந்த பத்து ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அர்ஜெண்டினாவில் வறட்சி ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில், அர்ஜெண்டினா அரசு பயோசெரஸ் நிறுவனத்துடன் இணைந்து வறட்சியைத் தாங்கும் வகையில்,  HB4 தொழில்நுட்பத்தில் மரபணு மாற்றியமைக்கப்பட்ட கோதுமையை உருவாக்கியுள்ளது.

மரபணு மாற்றியமைக்கப்பட்ட கோதுமை இறக்குமதிக்கு இதுவரை எந்தவொரு நாடும் ஒப்புதல் வழங்கவில்லை. HB4 கோதுமை இறக்குமதிக்குப் பிரேசில் ஒப்புதல் அளித்தவுடன், அர்ஜெண்டினாவில் வணிக ரீதியிலான உற்பத்தி தொடங்கப்படும்.

மரபணு மாற்றியமைக்கப்பட்ட கோதுமைக்குப் பிரேசில் பெரிய சந்தையாக இருக்கும் என்று பயோசெரெஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து பயோசெரெஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஃபெடரிகோ ட்ரூக்கோ, “அர்ஜெண்டினா இன்று சர்வதேச அளவில் தொழில்நுட்ப மாற்றத்தை முன்னெடுத்துள்ளது” என்று தெரிவித்துள்ளார்.

அர்ஜெண்டினாவின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகம், “HB4 தொழில்நுட்பம் வறட்சியைத் தாங்கும் வகையிலான விதைகளை வழங்குகிறது.

மரபணு மாற்றியமைக்கப்பட்ட கோதுமை விதைகள் உற்பத்தி இழப்புகளைக் குறைத்து அதிக விளைச்சலைத் தரும்” என்று தெரிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments