பட்டய படிப்பில் தமிழுக்கு அனுமதி.... மத்திய அரசு அறிவிப்பு
மத்திய தொல்லியல் துறை கல்லூரியில் முதுகலைப் பட்டயப் படிப்பிற்கு, தமிழில் தேர்ச்சி பெற்றவர்களும் விண்ணப்பிக்கலாம் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலம், கிரேட்டர் நொய்டாவில் இயங்கி வரும் மத்திய தொல்லியல் துறை கல்லூரியில், தொல்லியல் துறை சார்ந்த 2 ஆண்டு முதுகலைப் பட்டயப் படிப்பிற்கு விண்ணப்பிக்கலாம் என சமீபத்தில் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதில், பாலி, மற்றும் அரபு மொழிகளில் தேர்ச்சி பெற்றுள்ளவர்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இதில் தமிழ்மொழி புறக்கணிக்கப்பட்டதற்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு எழுந்தது. இதைதொடர்ந்து, மத்திய அரசின் இந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என, மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கு இன்று விசாரணைக்கு வர உள்ளது.
இதனிடையே, நாட்டிலேயே முதன்முறையாக செம்மொழி அந்தஸ்து பெற்ற தமிழ்மொழியை தொல்லியல் துறையின் முதுகலை பட்டய படிப்பிற்கான கல்வித் தகுதியில், சேர்க்க வேண்டும் என, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பிரதமருக்கு கடிதம் எழுதினார். திமுக தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்களும் இந்த விவகாரத்தில் மத்திய அரசு தலையிட வேண்டும் என வலியுறுத்தினர்.
இந்நிலையில், தமிழ், கன்னட மற்றும் மலையாளம் உள்ளிட்ட 10 பாரம்பரிய மொழிகளில் தேர்ச்சி பெற்றவர்கள், பட்டயப் படிப்பிற்கு விண்ணப்பிக்கலாம் என மத்திய தொல்லியல் துறை தலைமை இயக்குனர் அறிவித்துள்ளார்.
Comments