ஆட்டோவும் அந்த 10 பேரும்.. சிக்கியது கஞ்சா கேங்..! முகநூல் காட்டியும் கொடுக்கும்..!
சென்னையில் குற்றச்சம்பவங்களை தடுக்கும் வகையில் ஒரே நாளில் 10 பேர் கொண்ட கஞ்சா கும்பலை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். ஆட்டோவில் தப்பிய கஞ்சா வியாபாரி முக நூலால் அடையாளம் காணப்பட்ட பின்னணி குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு.
தமிழகத்தில் கொலை, கொள்ளை, வழிப்பறி மற்றும் தாக்குதல் போன்ற குற்றசம்பவங்களுக்கு கஞ்சா போதை முக்கிய காரணியாக இருந்துவருகின்றது. கஞ்சா போதைக்கு அடிமையான கூலிப்படையினரின் அட்டகாசமும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது.
சென்னையில் கஞ்சா விற்பனையை ஒழிக்கவும் கஞ்சா வியாபாரிகளை சுற்றிவளைக்கவும் பெரு நகர காவல் ஆணையர் மகேஸ்குமார் அகர்வால் உத்தரவின் பேரில் காவல்துறையினர் அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
ஆந்திராவில் இருந்து கண்டெய்னர் லாரிக்குள் பதுக்கி வைத்து சென்னைக்கு கடத்திவரப்பட்ட 510 கிலோ கஞ்சாவை கைப்பற்றினர். அவர்கள் மூலமாக சென்னையில் யார் யாருக்கு கஞ்சா சப்ளை செய்யப்படுகின்றது என்பதை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க காவல் இணை ஆணையர் பாலகிருஷ்ணன் மேற்பார்வையில் சப் இன்ஸ் பெக்டர் விஜய் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.
தனிப்படை காவல்துறையினரின் விசாரணையில் வட சென்னையின் திருவொற்றியூர், எண்ணூர், காசிமேடு உள்ளிட்ட பகுதிகளில் ஆட்டோக்களில் சில பெண்கள் பயணிகள் போல அமர்ந்து கொண்டு எளிதாக கஞ்சா கடத்தி விற்பதாக தகவல் கிடைத்தது.
குறிப்பிட்ட எண் கொண்ட ஆட்டோவை காவல்துறையினர் தீவிரமாக தேடிவந்த நிலையில் அந்த ஆட்டோவை காயலான் கடையில் பிரித்து போடப்பட்ட நிலையில் போலீசார் கண்டுபிடித்தனர். ஆட்டோவின் பதிவு எண்ணை கொண்டு விசாரித்த போது அது போலியான நம்பர் என்பது தெரியவந்தது.
பின்னர் அந்த ஆட்டோவின் சேசிஸ் எண்ணை வைத்து விசாரித்த போதும் தற்போதைய உரிமையாளர் குறித்த தகவல் முழுமையாக கிடைக்கவில்லை. இந்த நிலையில் மேற்கூறிய எண் கொண்ட ஆட்டோவின் பின் பக்க படம் சமூக வலைதளமான முக நூலில் இருக்கும் தகவல் கிடைத்தது. அந்த ஆட்டோவின் படத்தை பதிவிட்டவர் யாரென்று விசாரித்த போது அது திருவொற்றியூரை சேர்ந்த குடுமி மணி என்பதும் அவன் தான் ஆட்டோவில் கஞ்சாவை கடத்தி விற்று வந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.
அவனை பிடித்து விசாரித்த போது குடுமி மணி தனது மனைவிகளை ஆட்டோவில் பயணிகள் போல அமர வைத்து போலீசாருக்கு சந்தேகம் எழாத வகையில் கிலோ கணக்கில் கஞ்சா கடத்தி வந்தது தெரியவந்தது. அவன் கொடுத்த தகவலின் பேரில் காசிமேடு பகுதியை சேர்ந்த பொட்டலம் காசி, அவனது மனைவி , கஞ்சா விற்கும் ஏஜெண்டுகள் என மொத்தம் 10 பேரை கைது செய்த தனிப்படை காவல்துறையினர் அவர்களிடம் இருந்து 5 கிலோ எடையுள்ள கஞ்சாவை கைப்பற்றினர்.
ஆட்டோவும், 12 செல்போன்களும், கஞ்சாவை எடை போடும் மெஷினும் பறிமுதல் செய்யப்பட்டன. கடந்த 3 மாதங்களில் மட்டும் சென்னையில் 1685 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டிருப்பது குறிப்பிடதக்கது.
சென்னையில் கஞ்சா புழக்கத்தை ஒழிக்க வேண்டும் என்பதில் தனிப்படை காவல்துறையினர் தீவிரம் காட்டி வரும் நிலையில் அந்தந்தப்பகுதியில் உள்ள போலீசாரும் இணைந்து செயல்பட்டால் நகருக்குள் கஞ்சா விற்கும் கும்பலை விரைவாக ஒழிக்க இயலும் குற்றங்களும் குறையும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு.
Comments