திண்டுக்கல் சிறுமி படுகொலை செய்யப்பட்ட விவகாரம்... நீதியை நிலைநாட்ட கோரிக்கை!

0 37186

பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு உயிரிழந்த திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த சிறுமிக்கு நீதி கேட்டு #JusticeForKalaivani ட்விட்டரில் டிரெண்டிங் ஆகிவருகிறது. சிறுமிக்கு நீதி கேட்டு தமிழகம் முழுவதும் நாளை சலூன் கடைகள் அடைக்கப்படுகின்றன.  

திண்டுக்கல் மாவட்டம், வடமதுரை வட்டம், குரும்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் வெங்கடாசலம். முடிதிருத்தும் தொழிலாளியான வெங்கடாசலத்தின் 12 வயது மகள், கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் வன்கொடுமை செய்யப்பட்டு கொடூரமாகப் படுகொலை செய்யப்பட்டார். போலீசார் விசாரணையில், எதிர் வீட்டில் வசித்த கிருபானந்தன் என்ற 19 வயது இளைஞன்தான் சிறுமியைப் பாலியல் பலாத்காரம் செய்து, கொடூரமாக மின்சாரம் பாய்ச்சி கொன்றதாகக் குற்றம் சாட்டப்பட்டு, கைது செய்யப்பட்டான். ஒரு வருடங்களுக்கும் மேலாக திண்டுக்கல் மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் சிறுமியின் வன்கொடுமை மற்றும் படுகொலை வழக்கு நடைபெற்று வந்தது. இந்த நிலையில், போதிய ஆதாரங்கள் இல்லை என்று கூறி, கடந்த மாதம் 29 - ம் தேதி கிருபானந்தனை மகிளா நீதிமன்றம் விடுதலை செய்தது.

குற்றம்சாட்டப்பட்ட கிருபானந்தன் விடுதலை செய்யப்பட்டதற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.

இந்த நிலையில், தமிழ்நாடு சவரத்தொழிலாளர்கள் சங்கத்தின் மாநில தலைவர் செல்வராஜ், “சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் போல இனிமேல் வேறு யாருக்கும் நடக்கக்கூடாது. பாதிக்கப்பட்ட சிறுமிக்கு நீதியைப் பெற்றுத்தரவேண்டும். குற்றவாளி கிருபானந்தனுக்கு உரிய தண்டனையைப் பெற்றுத்தர காவல்துறையினர் இந்த வழக்கை அரசு மேல்முறையீடு செய்ய வேண்டும்என்பது போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி, நாளை ஒருநாள் முழுவதும் முடிதிருத்தம் கடைகள் அனைத்தும் அடைக்கப்படும்” என்று  தெரிவித்துள்ளார்.

முடி திருத்தும் தொழிலாளர்கள் நடத்தும் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து நெட்டிசன்கள் ட்விட்டரில் தம் கருத்தைப் பகிர்ந்து வருகிறார்கள்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments