58 நாட்களாக கடலில் தத்தளித்த மீனவர்கள் பத்திரமாக தாயகம் திரும்பினர்

0 3581
58 நாட்களாக கடலில் தத்தளித்த மீனவர்கள் பத்திரமாக தாயகம் திரும்பினர்

கடந்த ஜூலை மாதம் விசைப்படகில் மீன் பிடிக்கச் சென்று 58 நாட்களாக கடலில் தத்தளித்துக்கொண்டிருந்த காசிமேடு மீனவர்கள், மியான்மர் நாட்டு கடற்படையினரால் மீட்கப்பட்டு, சுமார் 75 நாட்களுக்கு பிறகு பத்திரமாக சென்னை திரும்பினர்.

ஜூலை மாதம் 23-ம் தேதி காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் இருந்து 9 மீனவர்கள் விசைப்படகில் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர். ஆகஸ்ட் 7-ம் தேதி திட்டமிட்டபடி அவர்கள் கரை திரும்பவில்லை.

இதை அடுத்து மீன்வளத்துறை, இந்திய கடலோர காவல் படை, இந்திய கடற்படை படை தேடுதல் வேட்டையை தொடங்கின.

இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் மூலம் மியான்மர், வங்கதேசம், தாய்லாந்து நாடுகளையும் தொடர்பு கொண்டு மீனவர்களை தேடுவதற்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டது.

இந்த நிலையில், செப்டம்பர் 15-ம் தேதி அதிகாலையில் மீனவர்களை மியான்மர் கடற்பகுதியில் அந்நாட்டு கடற்படையினர் மீட்டனர்.

மோசமான வானிலை காரணமாக மீட்கப்பட்ட மீனவர்கள் கடல் மார்க்கமாக தாயகம் திரும்ப வரவிருந்த திட்டம் ரத்தானது. இந்த நிலையில், மத்திய அரசின் வந்தே பாரத் திட்டத்தின் கீழ் மீனவர்கள் மியான்மரில் இருந்து டெல்லி வழியாக விமானம் மூலம் சென்னை விமான நிலையம் அழைத்து வரப்பட்டனர்.

அவர்களை அமைச்சர் ஜெயக்குமார், சால்வை அணிவித்து, ஊக்கத்தொகை கொடுத்து வரவேற்றார்.

இதனிடையே, 75 நாட்களுக்கு பிறகு வீடு திரும்பிய மீனவர்களை கண்ட குடும்பத்தினர் மகிழ்ச்சியில் திழைத்து ஆரத்தழுவி ஆரத்தி எடுத்து வரவேற்று கதறி அழுதனர். மேலும், சொல்ல முடியாத சந்தோஷத்தில் ஆழ்த்தியிருப்பதாகவும் உறவினர்கள் கூறினர்.

கொண்டு சென்ற உணவு பொருட்கள் அனைத்தும் தீர்ந்துவிட்ட நிலையில், பல நாட்கள் கடலின் உப்பு நீரையும், மழைநீரையும் மட்டுமே குடித்து தாகம் தணித்துக்கொண்டு உயிர் வாழ்ந்ததாக மீட்கப்பட்ட மீனவர் பார்த்திபன் உருக்கமாக தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments