'குச்சி மிட்டாயும் குருவி ரொட்டியும் இருக்குதா?' - தேனியில் திறக்கப்பட்ட 90'ஸ் கிட் மிட்டாய் கடை!

0 7029

தேனியில் 90 'ஸ் கிட்களுக்காகத் தொடங்கப்பட்டுள்ள பிரத்யேக மிட்டாய்கடை இளைஞர்களிடம் பிரபலமாகியுள்ளது. இந்தக் கடையில் விற்கப்படும் மிட்டாயின் அதிகபட்ச விலையே 10 ரூபாய்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

1990- ஆம் ஆண்டு காலக்கட்டத்தில் பிறந்தவர்கள் விளையாடி திளைத்த ஐஸ்பால், செவன்டீன், கோலிகுண்டு, பம்பரம் போன்ற பல விளையாட்டுகள் இப்போது காணாமலேயே போய் விட்டன. அவர்கள் விரும்பி சாப்பிட்ட உணவுப் பண்டங்களும் இப்போது கடைகளில் கிடைப்பது இல்லை. இதனால், 90 ஸ் கிட்கள் விரும்பி சாப்பிட்ட உணவுப் பண்டங்களை மீட்டெடுக்கும் முயற்சியாக தேனியில் வள்ளிக்கண்ணன் என்பவர் பிரத்யேக மிட்டாய் கடையைத் தொடங்கியுள்ளார்.

இந்தக் கடையில் 90 's கிட்கள் விரும்பி சாப்பிட்ட தேன் மிட்டாய், பொரி உருண்டை, மம்மிடாடி, கோன், இலந்தபழம், இலந்தவடை, சீனிமிட்டாய், பேப்பர்தோசை, குருவி ரொட்டி, ஏபிசிடி பிஸ்கட், எள்ளுஉருண்டை, புளிஜாம், புளிப்பு மிட்டாய், மிளகா மிட்டாய். பப்பரமிட்டாய், ஜவ்வுமிட்டாய். கமர்கட்டு, சூடமிட்டாய். மேங்கோபர், பென்சில்மிட்டாய், ஜெல்லி, ஆரஞ்சுமிட்டாய், குச்சி மிட்டாய், பால்பவுடர், பப்பிஜாம், புளி ஜாம், மாத்திரைமிட்டாய், பல்லிமிட்டாய், மிச்சர் உருண்டை, கமர்கட்டு உள்ளிட்ட 96 வகை மிட்டாய்கள் கிடைக்கின்றன.image

இந்த மிட்டாய் வகைகளை சென்னையிலிருந்து மொத்தமாகக் கொள்முதல் செய்யும் வள்ளிக்கண்ணன், அவற்றை நண்பர்கள் உதவியுடன் பிரித்து பாக்கெட்டில் போட்டு சிறிய அளவு லாபம் வைத்து விற்கிறார். கடையில் உள்ள மிட்டாய்களில் ஒன்றின் அதிகபட்ச விலையே 10 ரூபாய்தான். தற்போது, திருமணம் முடிந்து குழந்தை குட்டிகளுடன் இருக்கும் அதிர்ஷ்டக்கார 90ஸ் கிட்களும் தங்கள் செல்லக் குழந்தைகளுக்கும் இந்த ரக மிட்டாய்களை வாங்கிக் கொடுத்து சாப்பிட வைத்து அழகு பார்க்கின்றனர். சில சமயத்தில் போன் செய்து அந்த மிட்டாய் இருக்கிறதா... இந்த மிட்டாய் இருக்கிறதா என்று கேட்கும் 90ஸ் கிட்கள் காரில் வந்தும் மிட்டாய்களை வாங்கி செல்கிறார்களாம்.

வள்ளிக்கண்ணன் நடத்தும் இந்த கடைக்கு வரும் 90ஸ் கிட்கள் பழைய நினைவுகளில் மூழ்கி மீள்வதாக கூறுகின்றனர்...

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments