அத்திவரதர் பெயரில் அவென்யூ... கோயில் நிலத்தை ஆக்கிரமித்த தனியார்.... அரசு அதிகாரிகளின் அதிரடியால் 'கப்சிப்'

0 8857

காஞ்சிபுரம் அருகே கோயில் நிலத்தை ஆக்கிரமிப்பு செய்து வீட்டுமனையாக விற்க முயன்ற தனியார் நிறுவனத்துக்கு அரசு அதிகாரிகள் புத்தி புகட்டியுள்ளனர்.

தமிழகத்தில் கோயில்களுக்கு சொந்தமான ஏராளமான நிலங்களைத் தனியார் ஆக்கிரமிப்பு செய்துள்ளதாக புற்றீசல் போல புகார்கள் எழுந்துள்ள நிலையில் அவற்றை மீட்க இந்து அறநிலையத்துறை அதிகாரிகள் கடும் முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில், காஞ்சிபுரத்தில் கோயில் நிலத்தை ஆக்கிரமிக்க முயன்ற தனியார் நிறுவனத்துக்கு அரசு அதிகாரிகள் புத்தி புகட்டிய சம்பவம் அரங்கேறியுள்ளது.

காஞ்சிபுரம், ஆலடி பிள்ளையார் கோவில் தெருவில் உள்ள பனாமுடிஸ்வரர் கோயிலுக்குச் சொந்தமான காலியிடம் ஓரிக்கை மின்வாரிய துணை மின் நிலையம் அருகில் அமைந்துள்ளது. இந்தப் பகுதியில் தனியார் ரியல் எஸ்டேட் நிறுவனம் ஒன்று நிலங்களை வாங்கி அத்திவரதர் அவின்யு என்ற பெயரில் வீட்டுமனைகளாக மாற்றி விற்பனை செய்து வருகிறது. அப்போது, பனாமுடிஸ்வரர் கோவிலுக்குச் சொந்தமான 16 சென்ட் நிலத்தையும் ஆக்கிரமிப்பு செய்த அந்த தனியார் நிறுவனம் மதில் சுவர் எழுப்பி விற்பனைக்கு தயாராக வைத்திருந்தனர்.

இதுகுறித்து தகவலறிந்த இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் உஷாரானார்கள். உடனடியாக, அதிரடி நடவடிக்கையில் இறங்கினார். போலீஸ் உதவியுடன் தனியார் நிறுவனம் கட்டிய மதில் சுவரை பொக்லைன் இயந்திரம் கொண்டு இடித்துத் தள்ளி நிலத்தை மீட்டனர். மேலும், அந்த இடத்தில் இந்த நிலம் பனாமுடிஸ்வரர் கோயிலுக்கு சொந்தமானது என்று அறிவிப்பு பலகையும் எழுதி வைத்தனர். மீட்கப்பட்ட நிலத்தின் மதிப்பு 1 கோடியே 75 லட்சம் என்பது குறிப்பிடத்தக்கது. அரசு அதிகாரிகளின் அதிரடி நடவடிக்கையை கண்டு மிரண்டு போன தனியார் நிறுவனத்தை சேர்ந்தவர்கள் திருடனுக்கு தேள் கொட்டிய கதையாக கப்சிப் என அமைதியாக இருக்கிறார்கள்.

அரசு அதிகாரிகளின் இந்த அதிரடி நடவடிக்கையை காஞ்சிபுரம் மக்கள் வெகுவாக பாராட்டியுள்ளனர்...

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments