சொத்துப்பிரச்சனையில் கணவனை ஆள்வைத்துக் கடத்திய மனைவி?
சென்னை போரூர் அருகே சொத்துப்பிரச்சனையில் கணவனை ஆள்வைத்து கடத்தி, கட்டிவைத்து தாக்கியதாக மனைவி மீது புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை முகலிவாக்கத்தை சேர்ந்தவர் முத்து புதுப்பேட்டையில் சொந்தமாக கடை நடத்தி வருகிறார். இவரை கடந்த ஒன்றாம் தேதி முதல் காணவில்லை என உறவினர் அளித்த புகாரில் மாங்காடு போலீஸார் தேடி வந்தனர்.
இந்நிலையில், வண்டலூர் - மீஞ்சூர் வெளிவட்ட சாலையில் கார் ஒன்றில் தான் இருப்பதாக முத்து தெரிவித்ததன் பேரில் அங்கு சென்ற உறவினர்கள் உடலில் காயங்களுடன் இருந்தவரை வீட்டுக்கு அழைத்து வந்ததோடு போலீஸாருக்கும் தகவல் தெரிவித்தனர். முத்துவிடம் போலீஸார் மேற்கொண்ட விசாரணையில் அவரது மனைவியே ஆள் வைத்து கடத்தித் தாக்கியதாக அவர் கூறியுள்ளார்.
முத்துவும் அவரது மனைவி திவ்யாவும் கருத்துவேறுபாட்டால் பிரிந்த நிலையில் விவாகரத்து தொடர்பான வழக்கு நடந்து வருகிறது. இந்நிலையில் புதுப்பேட்டை கடையிலிருந்த முத்துவை, ஒன்றாம் தேதி திவ்யா காரில் வந்து அழைத்துச் சென்றுள்ளார். திருமழிசை பகுதியில் கார் சென்ற நிலையில் முத்து காரிலிருந்து இறங்கியுள்ளார்.
அப்போது காரை பின் தொடர்ந்து அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் முத்துவுக்கு மயக்கமருந்து தெளித்து மயக்கமடையச் செய்துள்ளனர்.
பின்னர் வேலூர் அழைத்துச் சென்றவர்கள் அங்குள்ள ஒரு வீட்டில் கட்டி வைத்து சொத்துக்காக சரமாரியாகத் தாக்கியதாகவும் போலீசாரிடம் முத்து தெரிவித்துள்ளார். இதனிடையே முத்துவை போலீசார் தேடிவந்த நிலையில் முத்துவை காரில் கொண்டுவந்து வண்டலூர் அருகே விட்டுச் சென்றுள்ளனர்.
தன்னை ஆள் வைத்து கடத்தி தாக்கியது தன் மனைவிதான் என்று முத்து அளித்த புகாரில் போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.
Comments