அரியர் ஆல் பாஸ் விவகாரத்தில் ஏஐசிடிஇ விதிகளை மீற முடியாது - சென்னை உயர் நீதிமன்றம் திட்டவட்டம்

0 5200
அரியர் ஆல் பாஸ் விவகாரத்தில் ஏஐசிடிஇ விதிகளை மீற முடியாது - சென்னை உயர் நீதிமன்றம் திட்டவட்டம்

அரியர் ஆல் பாஸ் விவகாரத்தில் அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக்  கவுன்சில் விதிகளுக்கு முரணான நிலைப்பாட்டை எடுக்க முடியாது என சென்னை உயர் நீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

கொரனோ ஊரடங்கு காரணமாக, கல்லூரி, பல்கலைக்கழக மாணவர்களுக்கு இறுதி செமஸ்டர் தேர்வு தவிர்த்து, மற்ற பருவ தேர்வுகளை தமிழக அரசு ரத்து செய்தது.

அரியர் தேர்வுகளுக்கு கட்டணம் செலுத்திய மாணவர்களும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகளுக்கு பதிலளித்த ஏஐசிடிஇ, அரியர் தேர்வு ரத்து என்பது அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் கவுன்சில் மற்றும் பல்கலைக்கழக மானியக்குழு விதிகளுக்கு முரணானது என தெரிவித்திருந்தது.

இந்த வழக்கு நீதிபதிகள் சத்யநாராயணன், ஹேமலதா அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, மனுவுக்கு பதிலளிக்க பல்கலைக்கழக மானியக் குழு  தரப்பில் அவகாசம் கேட்கப்பட்டது.

அரசின் உத்தரவுக்கு ஆதரவாக வாதிட, இந்த வழக்கில் தங்களை இணைத்துக் கொள்ள வேண்டும் என சில மாணவர்கள் தரப்பில் முறையீடு செய்யப்பட்டது.

இதைக்கேட்ட நீதிபதிகள், இந்த விவகாரத்தில் ஏஐசிடிஇ விதிகளுக்கு முரணான நிலைப்பாட்டை எடுக்க முடியாது என திட்டவட்டமாக தெரிவித்தனர்.

அரியர் தேர்வு ரத்து செய்ததற்கு ஆதரவாக வழக்கு தொடரும் மாணவர்களின் மொத்த அரியர் எண்ணிக்கை, 10ம் வகுப்பு முதல் அவர்களின் கல்வி விவரங்கள் கேட்கப்படும் எனவும் எச்சரித்தனர்.

ஏற்கனவே சொமோட்டோ, ஸ்விகி உள்ளிட்ட ஆன் லைன் டெலிவரி நிறுவனங்களில் எஞ்சினியரிங் படித்தவர்களே பணியாற்றுவதாக வேதனை தெரிவித்த நீதிபதிகள், தேர்வு எழுதாமல் தேர்ச்சி பெற வேண்டும் என மாணவர்கள் எப்படி எதிர்பார்க்கலாம் எனவும் கேள்வி எழுப்பினர்.

வழக்கின் விசாரணை நவம்பர் 20 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments