கிர்கிஸ்தானில் தேர்தலை ரத்து செய்யக்கோரி மாபெரும் போராட்டம்: நாடாளுமன்றம் சூறை, முக்கிய ஆவணங்கள் கிழிப்பு
கிர்கிஸ்தானில் பொதுத்தேர்தல் முடிவுகளை ரத்து செய்யக்கோரி மக்கள் நடத்திய மாபெரும் போராட்டத்தில் நாடாளுமன்றம் சூறையாடப்பட்டது.
மத்திய ஆசிய நாடுகளில் ஒன்றான கிர்கிஸ்தானில் கடந்த ஞாயிறன்று நடைபெற்ற பொதுத்தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை.
மேலும் 4 கட்சிகள் மட்டுமே நாடாளுமன்றத்துக்குள் நுழைவதற்கான தகுதியைப் பெற்றதால் அதிர்ச்சி அடைந்த மற்ற கட்சிகள் தேர்தல் முடிவுகளை ரத்து செய்யக்கோரி போராட்டத்தில் குதித்தனர்.
தலைநகர் பிஷ்கெக்கில் உள்ள மத்திய சதுக்கத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டு பிரமாண்ட போராட்டம் நடத்தினர்.
அப்போது போராட்டக்காரர்களுக்கும் போலீசாருக்கும் இடையே மோதல் வெடித்தது.
இருதரப்பினரும் ஒருவரை ஒருவர் சரமாரியாக தாக்கிக்கொண்டனர்.
இந்த மோதலில் ஒருவர் உயிரிழந்த நிலையில் சுமார் 600 பேர் படுகாயம் அடைந்தனர்.
இதனிடையே தலைநகர் பிஷ்கெக்கில் உள்ள நாடாளுமன்ற கட்டிடத்தை போராட்டக்காரர்கள் சூறையாடினர்.
மேலும் அதே வளாகத்தில் அமைந்துள்ள ஜனாதிபதியின் அலுவலகத்துக்குள் போராட்டக்காரர்கள் நுழைந்து ஆவணங்களை கிழித்தெறிந்தனர்.
இந்த போராட்டத்தால் கிர்கிஸ்தானில் தொடர்ந்து பதற்றமான சூழல் நிலவி வருகிறது.
Comments