14 வயது சிறுமியுடன் திருமணம்: கம்பி எண்ணும் 25 வயது இளைஞர்... பெற்றோர்களுக்கும் சிறை!
திருண்ணாமலையில் 14 வயது சிறுமியை திருமணம் செய்த இளைஞர் போக்சோ சட்டத்தின் கீழ் கம்பி எண்ணிக் கொண்டிருக்கிறார்.
திருவண்ணாமலை மாவட்டம் மங்கலம் அடுத்த கொத்தந்தவாடி கிராமத்தைச் சேர்ந்த செல்வம்- மல்லிகா ஆகியோரின் மகன் பிரசாந்த்( வயது 25)/ இவருக்கும் பெருமணம் கிராமத்தைச் சேர்ந்த 14 வயது சிறுமிக்கும் கடந்த 31 ஆம் தேதி குலதெய்வக் கோயிலில் திருமணம் நடந்துள்ளது.
இந்த திருமணம் தொடர்பாக சைல்டு லைனுக்கு ரகசிய புகார் அளிக்கப்பட்டது, தகவல் அடிப்படையில் சைல்டு லைன் அலுவலர் அசோக்குமார் திருவண்ணாமலை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். தொடர்ந்து, குழந்தை திருமணம் செய்துகொண்ட பிரசாந்தை போக்சோ சட்டத்தில் கைது செய்தனர். திருமணத்துக்கு உடைந்தாக இருந்த பிரசாந்தின் பெற்றோர், சிறுமியின் பெற்றோரும் கைது செய்யப்பட்டு திருவண்ணாமலை கிளைச்சிறையில் அடைக்கப்பட்டனர். மீட்கப்பட்ட சிறுமி பெருமணம் கிராமத்தில் உள்ள குழந்தைகள் பாதுகாப்பு மையத்தில் சேர்க்கப்பட்டுள்ளது.
இந்திய அளவில் 'பேட்டி பச்சாவோ பேட்டி படாவோ' என்ற பெண் குழந்தைகளை பாதுகாப்போம், பெண் குழந்தைகளைப் படிக்க வைப்போம் என்ற திட்டத்தை திருவண்ணாமலை மாவட்ட்டத்தில் சிறப்பாக செயல்படுத்தியதற்காக மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.கந்தசாமி விருது பெற்றுள்ளார், இதற்கிடையே , இந்த மாவட்டத்தில் குழந்தை திருமணமும் அதிகளவில் நடைபெற்று வருவது சமூக ஆர்வலர்களிடையே மிகுந்த வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.
Comments