கத்தரிக்காய் விலை.. விவசாயிகள் கண்ணீர் வியாபாரிகள் மகிழ்ச்சி..! என்னதான் தீர்வு ?

0 16304

திண்டுக்கல் சுற்றுவட்டார பகுதிகளில் விவசாயிகளிடம் அடிமாட்டு விலைக்கு கொள்முதல் செய்யப்படும் கத்திரிக்காய் சென்னை கோயம்பேட்டில் 15 மடங்கு விலை உயர்த்தி விற்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

தமிழகத்தில் எந்த ஆண்டும் இல்லாத வகையில் இந்த ஆண்டு நெற்பயிர் விளைச்சலை போலவே அனைத்து விதமான காய்கறி பயிர்களும் இரட்டை மகசூலை கொடுத்துள்ளன. இதனால் மகிழ்ச்சியில் திளைத்திருக்க வேண்டிய விவசாயிகள் தாங்கள் விளைவித்த காய்கறிகளுக்கு உரிய விலை கிடைக்காததால் கவலை அடைந்துள்ளனர்.

அந்த வகையில் திண்டுக்கல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து திண்டுக்கல் மற்றும் ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டிற்கு விவசாயிகளால் தோட்டத்தில் இருந்து பறித்துக் கொண்டு வரப்படும் கத்தரிக்காய்களுக்கு உரிய விலை இல்லை என விவசாயிகள் வேதனை தெரிவித்து வருகின்றனர்.

விவசாயிகளிடம் ஒரு கிலோ கத்தரிக்காய் 4 ரூபாய் முதல் அதிக பட்சமாக 12 ரூபாய் வரை மட்டுமே விலை வைத்து பெறப்படுகிறது. அதாவது 50 கிலோ எடையுள்ள கத்தரிக்காய் மூடைக்கு 100 ரூபாய் தான் விலையாக கிடைப்பதாக விவசாயிகள் வேதனை தெரிவித்தனர்.

இந்த விலை தங்களுக்கு கட்டுப்படியாகாது என்பதால் பல விவசாயிகள் கத்தரிக்காயை பறிக்காமல் செடியிலேயே விட்டு விடுகின்றனர். இரவு பகல் பாராமல் கண்விழித்து பாதுகாத்து வளர்த்த கத்தரிக்காய்க்கு விலையில்லாததால் பலர் அதனை தங்கள் வீட்டில் உள்ள ஆடுமாடுகளுக்கு இரையாக வெட்டி போடுவதற்காக பறித்துச் செல்கின்றனர்.

கத்தரி விவசாயிகளின் நிலைமை இப்படி இருக்க, அவர்களிடம் கத்தரிக்காய்களை அடிமாட்டு விலைக்கு கொள்முதல் செய்து செல்லும் இடைத்தரகர்கள் மற்றும் வியாபாரிகளோ செழிப்பான விலைக்கு விற்றுவருவதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகின்றது.

திண்டுக்கல் மார்க்கெட்டில் 100 ரூபாய்க்கு விவசாயிகளிடம் விலை வைத்து கொள்முதல் செய்யப்பட்ட 50 கிலோ கத்தரிக்காய் மூட்டை, சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் செவ்வாய்கிழமை நிலவரப்படி 50 கிலோ மூட்டை ஒன்று 1500 ரூபாய் முதல் 2000 ஆயிரம் ரூபாய் வரை நேரத்திற்கு தகுந்தாற்போல விலை வைத்து விற்கப்பட்டது. அதாவது 15 மடங்கு முதல் 20 மடங்கு லாபத்திற்கு கத்தரிக்காய் விற்கப்பட்டுள்ளது.

இந்த மொத்த விலையேற்றமும் அப்படியே அதனை வாங்கும் புரட்டாசி மாத காய்கறி பிரியர்களின் தலையில் ஏற்றப்படுவது தான் கொடுமையிலும் கொடுமை..!

வயல்காட்டில் தண்ணீர் பாய்ச்சி, விளைவித்த விவசாயிக்கு கிடைக்காத லாபம் வியாபாரிகளுக்கும், இடைத்தரகர்களுக்கும் பல மடங்கு தினம் தினம் கிடைப்பது, விவசாயத்தை எப்படி காக்கும் வணிகமுறையாக இருக்கமுடியும் என்று கேள்வி எழுப்புகின்றனர் விவசாயிகள்.

விலையேற்ற குற்றச்சாட்டை மறுக்கும் கோயம்பேடு வணிகர் சங்க கூட்டமைப்பு தலைவர் ஜி.டி ராஜசேகர், கோயம்பேட்டில் செயல்படுவது கமிஷன் மண்டி என்றும் தாங்கள் கமிஷனுக்கு காய்கறிகளை விற்றுக்கொடுப்பவர்கள் என்றும் கூறியதோடு திண்டுக்கல், ஒட்டன்சத்திரம் பகுதியில் இருந்து சென்னைக்கு காய்கறிகள் வருவதில்லை என்றார்.

உண்மையில், திண்டுக்கல் மற்றும் ஒட்டன் சத்திரத்தில் இருந்து தினமும் கத்தரிக்காய் மட்டும் 3 டன் சென்னை கோயம்பேட்டிற்கு அனுப்பி வைக்கப்படுவதாகவும், சீசனில் இது 5 டன்னாக உயரும் என்கின்றனர் விவசாயிகள்.

ஏக்கர் கணக்கில் காய்கறி பயிரிட்டு சொந்தமாக லாரி வைத்துள்ள விவசாயிகள் மட்டுமே தங்கள் ஊழியர்கள் மூலம் நேரடியாக கோயம்பேட்டிற்கு சரக்கு கொண்டு வருவதாகவும் மற்ற விவசாயிகள் அனைவரும் தங்கள் தோட்டத்தில் பறித்த கத்தரிக்காயை அருகில் உள்ள கமிஷன் மண்டிகள் நிர்ணயிக்கும் விலைக்கு கொடுத்து விட்டு செல்வது தான் வழக்கம் என்கின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments


BIG STORY