வரும் சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க. முதலமைச்சர் வேட்பாளர் யார்? இன்று அறிவிப்பு வெளியாகும் என கூறப்பட்டதால் பெரும் எதிர்பார்ப்பு
அதிமுகவில் முதலமைச்சர் வேட்பாளர் குறித்த அறிவிப்பு இன்று வெளியாகும் என எதிர்பார்க்கப்படும் சூழலில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோருடன் அமைச்சர்கள் மற்றும் கட்சியின் மூத்த நிர்வாகிகள் அதிகாலை வரை ஆலோசனை நடத்தினர்.
தமிழகத்தில் வரும் சட்டப்பேரவைத் தேர்தலில், அதிமுக சார்பில் போட்டியிடும் முதலமைச்சர் வேட்பாளர் யார்? என்பது இன்று அறிவிக்கப்படும் என அண்மையில் நடந்த அக்கட்சியின் செயற்குழுக் கூட்டத்திற்குப் பின் கட்சியின் துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி கூறியிருந்தார்.
இந்நிலையில், கடந்த சில நாட்களாக கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோரை மூத்த நிர்வாகிகள் பலரும் சந்தித்து வருகின்றனர்.
சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள முதலமைச்சர், மற்றும் துணை முதலமைச்சர் வீடுகளுக்கு சென்று மூத்த அமைச்சர்கள் மற்றும் நிர்வாகிகள் பல்வேறு கட்ட பேச்சுவார்த்தை நடத்தினர். காலையில் தொடங்கிய பேச்சுவார்த்தை நள்ளிரவையும் தாண்டி அதிகாலை வரை நீடித்தது.
அப்போது 11 பேர் கொண்ட அதிமுக வழிகாட்டுதல் குழு குறித்து ஆலோசனை நடத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது. இன்று அதிகாலையில், செய்தியாளர்களிடம் பேசிய கட்சியின் துணை ஒருங்கிணைப்பாளர் வைத்தியலிங்கம், காலை 10 மணிக்கு நல்ல செய்தி வரும் என்று தெரிவித்தார்.
அதிமுகவின் 11 பேர் கொண்ட வழிகாட்டுதல் குழுவில், ஒரு தரப்பில் 6 பேரும், மற்றொரு தரப்பில் 5 பேரும் இடம்பெறுவார்கள் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
முதலமைச்சர் வேட்பாளர் மற்றும் வழிகாட்டல் குழு குறித்த அறிவிப்பு இன்று வெளியாகும் என எதிர்பார்க்கப்படுவதால், ராயப்பேட்டையில் அதிமுக தலைமை அலுவலகம் அமைந்துள்ள அவ்வை சண்முகம் சாலை முதல் டி.டி.கே சாலை சந்திப்பு வரை இருபுறமும் இரும்புத் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. அலுவலகத்தின் நுழைவு வாயிலில் வாழைமரத் தோரணங்கள், வழிநெடுக தோரணங்கள் கட்டப்பட்டுள்ளன.
Comments