வயலில் யூரியா போட்டு 8 அடிக்கு கஞ்சா வளர்த்த வில்லேஜ் விஞ்ஞானி..! சித்தமருத்துவ பரிதாபம்
நோய்க்கு அரைத்து பூசுவதற்கு சித்தமருத்துவர் கொடுத்த கஞ்சா விதைகளை வயலில் பயிர் செய்து லட்சக்கணக்கில் பணம் கிடைத்ததால் 2 வருடமாக வயலில் யூரியா போட்டு கஞ்சா வளர்த்து வந்த வில்லேஜ் விஞ்ஞானியை போலீசார் கைது செய்தனர்.
திருப்பத்தூர் மாவட்டம் சந்திராபுரம் பகுதியில் முதியவர் ஒருவர் குறைந்த விலைக்கு கஞ்சா விற்பதாக கிடைத்த தகவலை தொடர்ந்து அவரது இருப்பிடத்தை கண்டறிந்த காவல்துறையினர், கஞ்சாவியாபாரி தருமன், மலையடிவார கிராமமான ஜொல்லங்குட்டை பகுதியில் வசித்து வருவதை அறிந்து அங்கு விரைந்தனர்.
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார் தலைமையில் அதிரடியாக சென்ற தனிப்படை காவல்துறையினருக்கு மத்தியில் எந்த பதற்றமும் இல்லாமல் நின்ற 75 வயதான முதியவர் தருமன், தனது வீட்டில் கஞ்சா ஏதும் இல்லை என கைவிரித்து நின்றார். ஆனால் அவரது வீட்டிற்கு முன்பாக உள்ள வயலில் ஒரு ஏக்கர் நிலப்பரப்பில் கஞ்சா பயிரிடப்பட்டிருப்பதை கண்டு போலீசார் அதிர்ச்சி அடைந்தனர்.
8 அடி உயரம் ஓங்கி வளர்ந்திருந்த கஞ்சா செடியை அந்த கிராமத்து மக்களுக்கும் அடையாளம் தெரியவில்லை. இதையடுத்து தருமனிடம் கஞ்சா பயிர் எப்படி கிடைத்தது ? என விசாரிக்க, சந்தன மரம் வெட்டுவதற்கு ஜெய்ஹிந்த் படத்தில் வரும் சங்கிலி கருப்பன் செந்தில் சொல்லும் விளக்கம் போல வினோத பிளாஸ் பேக் ஒன்றை தெரிவித்தார் தருமன்.
தருமனுக்கு 2 வருடத்திற்கு முன்னால் காலில் வெண்குஷ்ட நோய் வந்துள்ளது. அருகில் உள்ள பச்சூரில் உள்ள சித்த வைத்தியரிடம் சிகிச்சைக்காக சென்றுள்ளார். அவரோ கால் கிலோ அளவில் கஞ்சா விதைகளை கொடுத்து இதனை அரைத்து காலில் பூசினால் வெண்குஷ்ட நோய் தீரும் என்று அறிவுறுத்தியுள்ளார்.
அப்படி அரைத்து பூசியது போக மீதமிருந்த கஞ்சா விதைகளை தனது வயலில் தூவியுள்ளார் தருமன், அந்த மண்வளத்திற்கு கஞ்சா செடி மளமளவென வளர்ந்துள்ளது. அந்த கிராமத்து மக்களுக்கு அது கஞ்சா செடி என்பது தெரியாத நிலையில் முதல் அறுவடையில் கிடைத்த கஞ்சாவை சில லட்சத்திற்கு கைமாற்றி விட்டிருக்கிறார் முதியவர் தருமன்.
அதே பாணியில் அடுத்தடுத்து கஞ்சா விதைகளை தூவிய தருமன் அதிக மகசூல் கிடைக்க வேண்டுமென யூரியா உரம் வைத்து கஞ்சாவை வளர்த்துள்ளார். இந்தமுறை ஒவ்வொரு செடியும் 8 அடி உயரத்திற்கு வளர்ந்து அறுவடைக்கு தயாரான நிலையில் போலீசாரிடம் சிக்கிக் கொண்டார். மேலும் தானே வளர்க்கும் கஞ்சா என்பதால் அந்தபகுதியில் குறைந்த விலைக்கு கஞ்சா விற்று வந்துள்ளார் கஞ்சா வளர்ப்பு விஞ்ஞானி தருமன்..! என்று சுட்டிக்காட்டுகின்றனர் காவல்துறையினர்.
சுமார் 300 கஞ்சா செடிகளையும் பிடுங்கி அழித்த காவல்துறையினர் அந்த கிராமத்து மக்களிடம் கஞ்சா செடிகளை காண்பித்து இது போன்ற கஞ்சா செடிகள் வளர்ப்பது சட்டப்படி தண்டனைக்குரிய குற்றம் என்றும் யாராவது வளர்த்தால் உடனடியாக அருகில் உள்ள காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்று அறிவுறுத்தி சென்றனர். கஞ்சா செடிவளர்த்த தருமனை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
அதே நேரத்தில் ஒவ்வொரு மாவட்ட அளவிலும் தனியாக இயங்கும் போதை பொருள் தடுப்புத்துறையினர் தீவிரமாக கண்காணித்து தொடர் நடவடிக்கை மேற்கொள்ளாவிட்டால் ஆந்திர எல்லை பகுதிகளில் கஞ்சா செடிவளர்ப்பை சமூக விரோதிகள் விவசாயமாக மாற்றிவிடும் அபாயம் உள்ளது.
Comments