முதலமைச்சர் வேட்பாளர் யார்? இபிஎஸ், ஓபிஎஸ் தீவிர ஆலோசனை
சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக முதலமைச்சர் வேட்பாளர் யார் என நாளை அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படும் நிலையில், முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சர் கட்சியின் முன்னணித் தலைவர்களுடன் தனித்தனியாக ஆலோசனையில் ஈடுபட்டனர்.
கடந்த மாதம் சென்னையில் நடைபெற்ற அ.தி.மு.க. செயற்குழுக் கூட்டத்திற்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய அக்கட்சியின் துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி, வரும் 7ஆம் தேதி முதலமைச்சர் வேட்பாளர் யார் என்பதை ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் இணைந்து அறிவிப்பார்கள் எனத் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சரை அமைச்சர்களும், கட்சி நிர்வாகிகளும் தொடர்ந்து சந்தித்து ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
சென்னை தலைமைச்செயலகத்தில் நேற்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை மூத்த அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி, செங்கோட்டையன், திண்டுக்கல் சீனிவாசன், சி.வி.சண்முகம், ஆர்.பி. உதயகுமார், ராஜேந்திரபாலாஜி, வெல்லமண்டி நடராஜன் ஆகியோர் சந்தித்து முக்கிய ஆலோசனை நடத்தினர்.
அதேசமயம் தேனி மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வத்தை கட்சியின் பல்வேறு மாவட்ட நிர்வாகிகள் சந்தித்தனர்.
இதற்கிடையே தமது ட்விட்டர் பக்கத்தில், தமிழக மக்கள் மற்றும் அதிமுக தொண்டர்களின் நலனை கருத்தில் கொண்டே தனது முடிவுகள் இதுவரை இருந்துள்ளன, இனியும் அவ்வாறே இருக்கும் என ஓபிஎஸ் பதிவிட்டார். பெரியகுளத்தில் இருந்து புறப்பட்ட ஓ.பி.எஸ். சென்னை வந்தடைந்தார்.
Comments