ஜி.எஸ்.டி நிலுவைத் தொகை தொடர்பாக அக்.12ம் தேதி மீண்டும் ஆலோசனை கூட்டம் - மத்திய நிதியமைச்சர்

0 1183
ஜி.எஸ்.டி நிலுவைத் தொகை தொடர்பாக அக்.12ம் தேதி மீண்டும் ஆலோசனை கூட்டம் - மத்திய நிதியமைச்சர்

ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில் நிலுவைத் தொகை தொடர்பாக முடிவு எட்டப்படாத நிலையில், அக்டோபர் 12ம் தேதி மீண்டும் ஆலோசனை நடைபெறும் என, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில், 42வது ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டம் காணொலி வாயிலாக நேற்று நடைபெற்றது.

மாநில நிதியமைச்சர்கள் பங்கேற்ற அந்தக் கூட்டம் சுமார் 7 மணி நேரம் நடைபெற்றது.

அதில், நிதி நெருக்கடியைச் சமாளிக்க சந்தையில் கடன் வாங்குவது தொடர்பான மத்திய அரசின் ஆலோசனைகளை நிராகரித்த 10 மாநிலங்கள், சுமார் 1 லட்சம் கோடி ரூபாய் நிலுவைத்தொகையை நடப்பாண்டிலேயே வழங்க வேண்டும் என வலியுறுத்தியதால், நிலுவைத் தொகை தொடர்பாக இறுதி முடிவு எதுவும் எட்டப்படவில்லை.

கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த நிர்மலா சீதாரமன், மாநிலங்களுக்கான நிலுவைத்தொகை கட்டாயம் வழங்கப்படும் எனவும், இதுதொடர்பான தீர்க்கப்படாத விவகாரங்கள் குறித்து விவாதிக்க வரும் 12ம் தேதி ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் மீண்டும் கூடும் எனவும் தெரிவித்தார்.

மேலும், இழப்பீட்டு செஸ் வரியாக வசூலிக்கப்பட்ட தொகையில் 20 ஆயிரம் கோடி ரூபாய் திங்கட்கிழமை இரவுக்குள், மாநிலங்களுக்கு விடுவிக்கப்படும் என்றும் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

இதனிடையே இந்த கூட்டத்தில், குறைவான இழப்பீடு பெற்ற மாநிலங்களுக்கு, ஒருங்கிணைந்த ஜிஎஸ்டி தொகையாக 25 ஆயிரம் கோடி ரூபாய் வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

மாநிலங்களுக்கு இழப்பீடு வழங்குவதற்காக ஆடம்பரப் பொருட்கள், உடலுக்கு தீங்கு விளைவிக்கும் பொருட்கள் மீது விதிக்கப்பட்ட செஸ் வரியை, 2022க்குப் பிறகும் வசூலிக்கவும், ஆண்டு வர்த்தகம் 5 கோடி ரூபாய்க்கும் குறைவாக உள்ளவர்கள், காலாண்டிற்கு ஒருமுறை ஜி.எஸ்.டி கணக்கை தாக்கல் செய்தால் போதுமானது என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments