பள்ளிகளைத் திறக்க மத்திய அரசின் வழிகாட்டு நெறிமுறைகள்
வரும் 15ம் தேதி முதல் பள்ளிகள் திறப்பதற்கு அனுமதி அளிக்கப்பட்ட நிலையில், அதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.
கொரோனா தொற்று காரணமாக அரசு அறிவித்துள்ள ஊரடங்கு தளர்வுகளை வெளியிட்டுள்ள மத்திய அரசு அக்டோபர் 15 முதல் பள்ளிகளை திறக்க அனுமதி அளித்துள்ளது.
ஆனால் பள்ளிகள் திறப்பது குறித்து மாநில அரசுகள், யூனியன் பிரதேசங்கள் முடிவு செய்து கொள்ளலாம் எனவும் அறிவிப்பில் தெரிவித்திருந்தது. இந்நிலையில் பள்ளிகள் திறப்பு குறித்த வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் வெளியிட்டுள்ளார்.
அதில், பெற்றோர்களின் ஒப்புதல் கடிதத்துடன் மட்டுமே மாணவர்கள் பள்ளிக்கு வரவேண்டும் என்றும், நேரடி வகுப்புகளா அல்லது ஆன்லைன் வகுப்புகளா என்பதை மாணாக்கர்கள் தேர்வு செய்து கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பள்ளியில் அனைத்து வகுப்பறைகள், கழிப்பறைகள், பள்ளி வளாகம் மற்றும உபகரணங்கள் ஆகியவை கிருமிநாசினி கொண்டு சுத்தப்படுத்த வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
மாணவர்களின் வருகைப்பதிவில் கண்டிப்பு கூடாது. நெகிழ்வுத்தன்மையுடன் கூடிய வருகைப்பதிவு இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பள்ளிக்கு வரும் மாணவர்களுக்கு இடையே தனிமனித இடைவெளி இருக்கவேண்டும் என்றும், ஒவ்வொரு ஆசிரியரும், மாணவரும் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும் என்றும் அதில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில் தமிழகத்தில் பள்ளிகளைத் திறப்பது குறித்து மாநில அரசு எந்த முடிவும் எடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Ministry of Education releases guidelines for reopening of schools from 15th October in a graded manner; States/UTs to prepare their own Standard Operating Procedure for health, hygiene and safety and learning with physical/social distancing
— ANI (@ANI) October 5, 2020
Comments