'இப்படி சாவுறதுலாம் இங்கே சகஜம்தான்' - ஊசி போட்ட சில விநாடிகளில் துடிதுடித்து இறந்த தாய்... மகன் கதறல்!
நாகர்கோவில் அரசு மருத்துவமனையில், ஊசி போட்ட சில வினாடிகளில் மகன் கண்முன்னே தாயார் பரிதாபமாகத் துடிதுடித்து மரணமடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறை அருகே செம்மங்காலை பகுதியைச் சேர்ந்தவர் சந்திரிகா. தற்போது, 50 வயதான அவர் ரத்த சோகை நோயால் பாதிக்கப்பட்டு குழித்துறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பிறகு, மேல் சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். இதற்கிடையே, கொரோனா பாதித்ததால், அதற்கும் சிசிச்சையளிக்கப்பட்டது. கடந்த 3 - ம் தேதி கொரோனாவிவிருந்து குணமடைந்த சந்திரிகாவை வீட்டுக்கு அனுப்ப மருத்துவர்கள் முடிவு செய்தனர்.
தாயாரை அழைத்துச் செல்ல அவரது மகன் அனீஷ் மருத்துவமனைக்கு வந்துள்ளார். முன்னதாக, நேற்று மாலையில் சந்திரிகாவுக்கு ஏதோ ஊசி செலுத்தப்பட்டுள்ளது. ஊசி செலுத்திய சிறிது நேரத்திலேயே சந்திரிகா துடிதுடித்து இறந்து போனார். தன் கண் முன்னே தாய் மரணமடைந்ததால் அனீஷ் செவிலியரிடம் சண்டை போட்டுள்ளார். அப்போது, 'இப்படி சாவுறது எல்லாம் இங்கே சகஜம்தான்' என்று அந்த செவிலியர் அலட்சியமாக பதிலளித்துள்ளார்.
தன் தாய் மரணத்துக்கு செவிலியரின் அலட்சியமே காரணம் என்று மருத்துவமனை நிர்வாகத்திடம் அனீஷ் புகாரும் அளித்தார். மேலும், ஆசாரிப்பளம் காவல் நிலையத்திலும் புகார் அளித்தார். சம்பவம் தொடர்பாக ஆசாரிபள்ளம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தாயின் மரணம் குறித்து அனீஷ் செய்தியாளர்களிடம் கூறுகையில், என் தாயாரை வீட்டுக்கு அழைத்து செல்லலாம் என்று மகிழ்ச்சியாக இருந்தேன். அப்போது, செவிலியர் போட்ட ஊசியால் என் கண் முன்னரே துடிதுடித்து இறந்தார். என் நிலை யாருக்கும் வரக்கூடாது என்று கண்ணீருடன் கூறியுள்ளார்.
Comments