நாடு முழுவதும் தொடங்கியது சிவில் சர்வீஸ் முதல்நிலைத் தேர்வு
மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் சிவில் சர்வீஸ் முதல்நிலைத் தேர்வு நாடு முழுவதும் தொடங்கி நடைபெற்று வருகிறது.
ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., ஐ.எஃப்.எஸ். உள்ளிட்ட பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வை மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்துகிறது. அந்த வகையில், தற்போது காலியாக உள்ள 750 பணியிடங்களுக்கான முதல்நிலை தேர்வு நாடு முழுவதும் தொடங்கி நடைபெற்று வருகிறது. நாடு முழுவதும் 72 நகரங்களில் 2,569 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
தமிழகத்தில் சென்னை, மதுரை, திருச்சி, கோவை உள்ளிட்ட 10 மாவட்டங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. சென்னையில் மட்டும் 62 தேர்வு மையங்களில் நடைபெற்று வரும் இந்த தேர்வில் 22ஆயிரம் பேர் பங்கேற்றுள்ளனர்.
காலை 9.30 மணிக்கு தொடங்கி 11.30 மணிவரை முதல் கட்டமாகவும், பிற்பகல் 2.30 மணிக்கு தொடங்கி 4.30 மணி வரை இரண்டாவது கட்டமாகவும் தேர்வு நடைபெறுகிறது. முதல்நிலை தேர்வில் தேர்ச்சி பெறுபவர்கள் முதன்மை தேர்வுக்கு அழைக்கப்படுவர்.
தேர்வர்கள் கண்டிப்பாக முகக்கவசம் அணிந்து வரவும், வெளிப்படையான பாட்டில்களில் கிருமி நாசினி எடுத்து வரவும், தனிநபர் இடைவெளியை பின்பற்றவும் அறிவுறுத்தப்பட்டது.
முன்னெச்சரிக்கையாக உடல்வெப்ப பரிசோதனைக்கு பின்னரே தேர்வர்கள் அனுமதிக்கப்பட்டனர். ஹால்டிக்கெட் மற்றும் அடையாள அட்டை ஆகியவை சரிபார்க்கப்பட்டது.
தேர்வு தொடங்குவதற்கு 10 நிமிடங்கள் முன்பு வரை மட்டுமே மையத்திற்குள் தேர்வர்கள் அனுமதிக்கப்பட்டனர். ஓ.எம்.ஆர். ஷீட்டில் எழுத வசதியாக தேர்வர்கள் கறுப்பு நிற பால் பாயின்ட் பேனா எடுத்துவர அறிவுறுத்தப்பட்டனர். கூடுதல் தொழில்நுட்பங்கள் உடைய ஸ்மார்ட் வாட்ச் ஆகியவை அணிந்து வர தடை விதிக்கப்பட்டது.
மேலும், செல்போன் உள்ளிட்ட மின்னணு சாதனங்கள் கொண்டு வரக்கூடாது என்றும், மேற்குறிப்பிட்ட விதிமுறைகளை மீறுவோர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு, எதிர்காலத்தில் தேர்வு எழுத தடை விதிக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டிருந்தது. மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு என தனியாக சிறப்பு தேர்வு மையங்களும் அமைக்கப்பட்டிருந்தன.
திருச்சியில் 14 தேர்வு மையங்களில் நடைபெற்று வரும் யு.பி.எஸ்.சி. தேர்வை 5,642 பேர் தேர்வு எழுதி வருகின்றனர். தேர்வில் பங்கேற்ற மாற்றுத்திறனாளி மாணவர்கள் 20 பேருக்கு சிறப்பு மையம் அமைக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரியில் 8 தேர்வு மையங்களில் யு.பி.எஸ்.சி. முதல் நிலைத் தேர்வு நடைபெற்று வருகிறது. 2,913 பேர் தேர்வில் பங்கேற்றுள்ளனர். கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றும் வகையில், முகக்கவசம் அணிந்து வரவும், கிருமி நாசினியால் கைகளை சுத்தம் செய்யவும் அறிவுறுத்தப்பட்ட பின்னரே தேர்வு மையத்திற்குள் அனுமதிக்கப்பட்டனர்.
Comments