புரட்டாசி மூன்றாவது சனி - தமிழகம் முழுவதும் பெருமாள் கோவில்களில் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம்

0 2845
புரட்டாசி மூன்றாவது சனி - தமிழகம் முழுவதும் பெருமாள் கோவில்களில் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம்

பெருமாளுக்கு உகந்த நாளான புரட்டாசி 3வது சனிக்கிழமையை ஒட்டி தமிழகம் முழுவதுமுள்ள பெருமாள் கோவில்களில் காலை முதலே ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

சென்னை:

சென்னை தியாகராய நகரில் உள்ள திருமலா திருப்பதி தேவஸ்தானத்தில், காலை முதலே ஏராளமான பக்தர்கள் திரண்டு, சுமார் 2 கி.மீ.தூரம் வரை நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். பெருமாளுக்கு சிறப்பு அலங்காரம் பூட்டி சிறப்பு அபிஷேக ஆராதனைகளும் நடைபெற்றன.

தூத்துக்குடி:

தூத்துக்குடி நகரின் மத்திய பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ வைகுண்ட பெருமாள் கோவிலில், அதிகாலையிலேயே நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகளும், ஆராதனைகளும் நடைபெற்றன. தொடர்ந்து பத்மாவதி தாயாருடன் சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்த பெருமாளை, ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

சேலம்:

சேலம் குரங்குச்சாவடி அருகே நகரமலை அடிவாரத்தில் உள்ள ஸ்ரீ சென்றாய பெருமாள் கோவிலில், திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக முதியவர்கள் மற்றும் குழந்தைகள் கோவிலுக்குள் செல்ல அனுமதிக்கப்படவில்லை. பக்தர்களுக்கு உடல்வெப்பம் பரிசோதிக்கப்பட்ட பின்னரே கோவிலுக்குள் அனுமதிக்கப்பட்டனர்.

செங்கல்பட்டு:

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே தென் திருப்பதி என்றழைக்கப்படும் வையாவூர் ஸ்ரீ பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவிலில், ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். மேலும் பலர் மாலை அணிந்து விரதமிருந்தும், நடைபயணமாக  வந்தும் வழிபாடு செய்தனர்.

ஈரோடு:

ஈரோடு மாவட்டம் பவானி அருகிலுள்ள பெருமாள் மலை மங்களகிரி பெருமாள் கோவிலில் அதிகாலை முதலே ஏராளமான பக்தர்கள் திரண்டு வந்து சாமி தரிசனம் செய்தனர். ஆனந்தபெருமாள் திருக்கோலத்தில் ஸ்ரீதேவி, பூதேவி சகிதம் காட்சியளித்த மங்களகிரி பெருமாளுக்கு சிறப்பு பூஜைகளும் நடைபெற்றன.

நெல்லை:

நெல்லை மாவட்டம் திருக்குறுங்குடி மலைநம்பி கோவிலில் திரண்ட நூற்றுக்கணக்கான பக்தர்கள், நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அனைவருக்கும் உடல் வெப்பம் பரிசோதிக்கப்பட்ட பின்னரே கோவிலுக்குள் அனுமதிக்கப்பட்டனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments