ஓட்டல் ஊழியர் மீது தாக்குதல் ? ரோந்து காவலர்கள் மீது புகார்

0 3599

சென்னை அமைந்தகரையில் பன்னீர் பிரைட் ரைஸ் தராத ஆத்திரத்தில் ஹோட்டல் கணக்காளரை தாக்கியதாக ரோந்து பணி காவலர்கள் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

சென்னை அமைந்தகரை நெல்சன் மாணிக்கம் சாலையில் ஆரோக்கியராஜ் என்பவருக்கு சொந்தமான ஆரோக்கிய பவன் என்ற ஹோட்டல் செயல்பட்டு வருகிறது.

வியாழக்கிழமை இரவு 9 மணியளவில் ரோந்து வந்த காவலர்கள் வெற்றிவேலன் மற்றும் ஏழுமலை ஆகிய இருவரும், இரவு 9 மணி முதல் 10 மணி வரை பார்சல் மட்டுமே வழங்க வேண்டும் எனவும், ஏன் வாடிக்கையாளர்கள் அமர்ந்து உணவு அருந்துகிறார்கள் எனவும் கேட்டுள்ளனர்.

வாடிக்கையாளர்கள் உணவருந்தி முடித்தவுடன் உடனடியாக ஹோட்டலை மூடி விடுவதாக கணக்காளர் ஆறுமுகம் தெரிவித்துள்ளார். அதனை ஏற்றுக் கொள்ளாமல் காவலர்கள் இருவரும் வாக்குவாதம் செய்ததாகவும் ஆறுமுகத்தின் சட்டையைப் பிடித்து இழுத்துச் சென்று தாக்கியதாகவும் கூறப்படுகிறது.

தினமும் ரோந்து வரும் காவலர்கள் வெற்றிவேலன், ஏழுமலை இருவரும் உணவு பொருட்களை வாங்கிச் செல்வார்கள் எனவும், கடந்த இரு தினங்களுக்கு முன்பு ரோந்து வந்தபோது, பன்னீர் பிரைடு ரைஸ் கேட்டு தீர்ந்துவிட்டதாக கூறியதை மனதில் வைத்துக் கொண்டு இவ்வாறு நடந்து கொண்டதாகவும் உணவகம் தரப்பில் கூறப்படுகிறது.

ஆறுமுகத்தின் வயிற்றுக்கு கீழ் காவலர் வெற்றிவேலன் தாக்கியதால் அவர் மயங்கி விழுந்ததை அடுத்து பொதுமக்கள் பலரும் திரண்டு காவலர்களின் செயலை கண்டித்துள்ளனர். அதன் பிறகு காவலர்கள் வெற்றிவேலன், ஏழுமலை அங்கிருந்து சென்றதாக கூறப்படுகிறது.

உணவகம் தரப்பில் கூறப்படுவது உண்மை என தெரிய வந்தால் சம்மந்தபட்ட காவலர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை உயரதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments