தாயும் சேயும் பலி... நாட்டு மருந்து கொடுத்த தம்பதி வெட்டிக் கொலை..! ஏற்காடு சம்பவத்தில் திருப்பம்

0 8162

சேலம் மாவட்டம் ஏற்காட்டில் பிரசவத்திற்கு நாட்டுமருந்து சாப்பிட்டதால் தாயும் சேயும் பலியான சம்பவத்திற்கு பழிக்குபழியாக, நாட்டுமருந்து கொடுத்த தம்பதியை வெட்டிக் கொன்றதாக வட மாநில கொலையாளிகள் வாக்குமூலம் அளித்துள்ளனர். அரைகுறை வைத்தியத்தால் நிகழ்ந்த விபரீதம் குறித்து  விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு

சேலம் மாவட்டம் ஏற்காட்டில் தனியார் எஸ்டேட் ஒன்றில் காவலாளியாக வேலைபார்த்து வந்த ஜார்க்கண்டு மாநிலத்தை சேர்ந்த கோண்டபகன் அவரது மனைவி சுதிகேன்ஸ் ஆகிய இருவரும் கடந்த சில தினங்களுக்கு முன்பு வெட்டிக் கொலை செய்யப்பட்டனர்.

அவர்களது பக்கத்து வீட்டில் தங்கி இருந்த புத்துராம், அவரது சகோதரர் முச்ரே, நண்பர்கள் ஹைராபுத்ரா, சுக்ராம், ராம்சேநாக் உள்ளிட்ட 5 பேரும் தலைமறைவாகி இருந்தனர்.

இதையடுத்து ஏற்காடு காவல்துறையினர் தனிப்படை அமைத்து தலைமறைவானவர்களை தேடி வந்தனர். இதில் முச்ரே, சுக்ராம், ராம்சே நாக் ஆகிய 3 பேரும் வெளியூருக்கு தப்பமுயன்ற போது சேலத்தில் சிக்கினர். முச்ரேவிடம் நடத்திய விசாரணையில் பழிக்குபழியாக நடந்த அதிர்ச்சி சம்பவம் என்பது தெரியவந்தது.

தற்போது தலைமறைவாக உள்ள புத்துராமின் மனைவி ஹாங்கே கர்ப்பமாக இருந்தபோது குழந்தை ஆரோக்கியமாக பிறக்க வேண்டும் என்பதற்காக எஸ்டேட் காவலாளி கோண்டபகனின் மனைவி சுதிகேன்ஸ் தனக்கு தெரிந்த நாட்டு மருந்துகளை அரைத்து கொடுத்துள்ளார்.

இந்த நிலையில் கர்ப்பிணியான ஹாங்கே 2 மாதங்களுக்கு முன்பு நாகலூர் அரசு மருத்துவமனையில் ஆண்குழந்தை ஒன்றை பெற்றெடுத்துள்ளார். அந்த குழந்தை அடுத்த சில மணி நேரங்களில் உயிரிழந்துள்ளது. அப்போதிருந்தே உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்த ஹாங்கேவும் கடந்த வாரம் உயிரிழந்துள்ளார்.

சேயும், தாயும் உயிரிழப்பதற்கு சுதிகேன் கொடுத்த தவறான நாட்டுமருந்து தான் காரணம் என மருத்துவர்கள் சுட்டிக்காட்டியதாக கூறப்படுகின்றது. இந்த நிலையில் இதற்கு பழிவாங்க திட்டமிட்ட புத்துராம் தனது சகோதரர் மற்றும் நண்பர்களை தனது வீட்டிற்கு வரவழைத்து நாட்டுமருந்து தம்பதியை தீர்த்துக்கட்ட திட்டம் தீட்டியுள்ளார்.

அதன்படி, தினமும் இரவு வேளையில் ஒன்றாக மது அருந்துவதை வழக்கமாக்கி உள்ளனர். கொலை நடந்தால் சத்தம் கேட்டு விடக்கூடாது என்று ஹிந்தி சினிமா பாடல்களை சத்தமாக ஒலிக்கவிட்டுள்ளனர்.

அதன்படி சம்பவத்தன்று கோண்டபகனுக்கும் அவரது மனைவி சுதிகேன்ஸுக்கும் மது ஊற்றிக்கொடுத்து அவர்கள் போதையில் சரிந்த நிலையில் இருவரையும் அரிவாளால் வெட்டிக் கொலை செய்து விட்டு தலைமறைவானதாக வாக்குமூலம் அளித்ததாக போலீசார் தெரிவித்தனர்.

மேலும் இந்த சம்பவத்தின் முக்கிய குற்றவாளியாக போலீசாரால் கருதப்படும் புத்துராம், ஹைராபுத்ரா ஆகியோரை பிடிக்க இரயில் நிலையங்களில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

முறையாக மருத்துவம் படித்து பயிற்சி பெற்ற மருத்துவர்கள் வழங்கும் மருந்துகளே, சில நேரங்களில் பிரசவிக்கும் தாய்மார்களுக்கு புது புது வில்லங்கத்தை கொண்டுவந்து விடுகின்றது என சுட்டிக்காட்டும் காவல்துறையினர், அரைகுறை நாட்டு வைத்தியத்தை வைத்துக் கொண்டு சுதிகேன்ஸ், கர்ப்பிணிக்கு கொடுத்த மருந்து, தாய் மற்றும் சேயின் உயிரோடு விளையாடிய விபரீதத்த்திற்கு பழிக்கு பழியாக இந்த கொடூர கொலை சம்பவம் நிகழ்ந்துள்ளது என்கின்றனர்.

இதனிடையே இந்த கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த இருவரில் ஒருவரின் சடலம் அழுகிய நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. வழக்கில் ஏற்கனவே முச்ரே, சுக்ராம், ராம்சே நாக் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், முக்கிய குற்றவாளிகளாக கருதப்பட்ட புத்துராம், ஹைராபுத்ரா ஆகியோரை போலீசார் தேடி வந்தனர்.

இதில் ஹைராபுத்ராவின் சடலம் கொலை சம்பவம் நடந்த அதே பகுதியில் கழுத்தறுபட்டு, முகம் அழுகிய நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. மற்றொரு நபரான புத்ராம் ஹைராபுத்ராவை கொலை செய்துவிட்டு தப்பி இருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் போலீசார் அவனை தீவிரமாக தேடி வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments