உணவு டெலிவரி உடையில் வழிப்பறி திருடர்கள்... அதிகாலையில் நடுரோட்டில் நடந்த சினிமா பாணி சேசிங்!

0 6603

சென்னையில், ஸ்விக்கி உணவு டெலிவரி செய்யும் நிறுவனத்தின் உடை அணிந்துகொண்டு, அதிகாலை நேரத்தில் தொடர் வழிப்பறியில் ஈடுபட்ட இருவரைக் காவல் ஆய்வாளர் நடுரோட்டில் சேசிங் செய்து அதிரடியாகக் கைது செய்துள்ளார்.

அடையாறு, மல்லிகைப்பூ நகர் பகுதியைச் சேர்ந்த கங்காதரன் என்பவர் தன் நண்பர் ஆகாஷ் உடன் மகாபலிபுரத்திலிருந்து நேற்று அதிகாலை 3 மணியளவில் சென்னைக்கு திரும்பி வந்து கொண்டிருந்தார். துரைப்பாக்கம் அருகே வந்தபோது, அவர்கள் வந்த இருசக்கர வாகனத்தில் பெட்ரோல் தீர்த்து நின்றுள்ளது. அப்போது, ஸ்விக்கி மற்றும் போன்பே நிறுவனங்களின் டீசர்ட் அணிந்திருந்த இரு நபர்கள் அவர்களிடம் வந்து பேச்சு கொடுத்துள்ளனர்.

அவர்கள், “பெட்ரோல் பங்க் பக்கத்தில்தான் இருக்கிறது. வண்டியை எங்களிடம் கொடுங்கள். நாங்கள் பெட்ரோல் போட்டுவிட்டு வருகிறோம். அதுவரை எங்களுள் ஒருவன் உங்கள் கூடவே நிற்கிறோம்” என்று கூறி கங்காதரனையும் ஆகாசையும் நம்ப வைத்துள்ளனர்.

பின்னர், பெருங்குடி டோல்கேட்டை நோக்கி ஒருவன் மோட்டார் சைக்கிளைத் தள்ளிச் சென்றுள்ளான். சிறிது நேரத்தில் ஆகாஷ், கங்காதரன் ஆகியோருடன் இருந்தவன் அவர்களை மிரட்டி செல்போனைப் பறித்துக் கொண்டு தப்பியோட முயன்றான். இதனால், அதிர்ச்சியடைந்த கங்காதரனும் ஆகாசும் சத்தம் போட்டுள்ளனர். அப்போது, ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த உதவி ஆய்வாளர் சத்தியா, தலைமைக்காவலர் ஜெயக்குமார் ஆகியோர் அந்த பகுதிக்கு வந்துள்ளனர். ஏதோ விபரீதம் என்பதை உணர்ந்துகொண்ட சத்தியா போலீஸ் வாகனத்தை விட்டு இறங்கி மின்னல் வேகத்தில் ஓடிச்சென்று செல்போன் பறித்தவனை மடக்கிப் பிடித்தார்.

போலீஸைப் பார்த்ததும் மோட்டார் சைக்கிளைத் தள்ளிக் கொண்டு சென்றவனும் அதைப் போட்டு விட்டு ஓட முயல அவனையும் போலீசார் விரட்டிச் சென்று மடக்கி பிடித்து கைது செய்தார். கைதான இருவரும் சென்னை கண்ணகி நகரை சேர்ந்த முரளி மற்றும் முருகவேல் என்பது தெரிய வந்தது.

மற்றவர்களுக்கு சந்தேகம் எழாத வகையில், ஸ்விக்கி போன்ற உணவு டெலிவரி நிறுவனங்களின் உடை அணிந்து கொண்டு, அதிகாலை சமயத்தில் தொடர் வழிப்பறியில் ஈடுபட்டதும் கண்டுபிடிக்கப்பட்டது. இரவு நேரத்தில் சமயோசிதமாக செயல்பட்டு வழிப்பறி திருடர்களை அதிரடியாகக் கைது செய்த காவல் ஆய்வாளர் சத்தியா, தலைமைக்காவலர் ஜெயக்குமார் ஆகியோருக்கு சென்னை காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் பாராட்டு தெரிவித்துள்ளார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments